Sep 6, 2012

Hey Ram \ 2000 \ வாதமா ? பிடிவாதமா ?-ஹேராம்=020

நண்பர்களே...கடந்த பதிவுக்கு முதல் இரண்டு நாள்... ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை.
குழம்பி விட்டேன்.
 ‘அவுட்ஸ்டேண்டிங்’ என நான் கருதிய சில பதிவுகளுக்கு பின்னூட்டமே போடாமல் மானசீகமாக‘பேனாவை கீழே வைத்து விட்டு’ சத்தம் இல்லாமல் வந்து விடுவேன்.
 ‘பேனாவை கீழே வைத்தல்’ என்ற சொல்லாடல்  ‘பியூட்டிபுல் மைண்ட்’ படம் பார்த்தவர்கள் எளிதில் விளங்கிக்கொள்வீர்கள்.
பார்க்க  வாய்ப்பில்லாதவர்களுக்கு இந்த எளிய விளக்கம்....

படத்தின்  ‘நிஜ நாயகன்’ பல்கலை கழக பேராசிரியர்.
அவரது சாதனையை மெச்சி சக பேராசிரியர்கள் தங்களது பேனாவை அவர் முன்னால் வைத்து விட்டுப்போவார்கள்.
 ‘ஹாலிவுட் பாலா’ பாணியில் சொன்னால்  ‘கெலிச்சுட்டே வாத்யாரே’.

அதே போன்று  ‘குப்பை’ எனக்கருதும் பதிவுகளுக்கும் ‘சைலண்டா’ நழுவி வந்திருவேன்.

எனவே நீங்க சைலண்டா வந்துட்டு போனது எந்த ரகம்?
இந்தப்பதிவின் பின்னூட்டம் வாயிலாக தெரிந்து கொள்ள ஆவல்.

கடந்த பதிவு பற்றி நண்பர் ராஜேஷ் பேஸ் புக்கில் நடத்திய விவாதம் கீழே காண்க...

கீழே உள்ள வாதத்திற்கு பதிலளிக்க விரும்பவில்லை.

“ புகழ்வோம் பழிப்போம்....புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் -இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண்மால் சீறல் நீ தீவினையோம்
எங்கள் மால் கண்டோய் இவை

என்று திருமாலையே,உம்மை நாங்கள் புகழ்வோம்,பழிப்போம்,பதிப்போம்,மதிக்க மாட்டோம்
இதற்கெல்லாம் கோபப்படாதே என்று சொல்லும் அருமையான வெண்பாதான் எனக்கு வழிகாட்டி”.
என்று  ‘சுஜாதா’ எழுதியதே இனி என்றும் எனக்கு வழிகாட்டி.

முதல் கருத்து ராஜா சுந்தரராஜன் எழுதியது...
  • நண்பர் screen space occupied என்பதைத்தான் size of the composition என்கிறார் என்று எடுத்துக் கொள்கிறேன். இது ஐஸன்ஸ்டீன் உருவாக்கிய இலக்கண விதி என்று நினைக்கிறேன்.

    நான் இலக்கண விதிகளை மதிக்காத ஆள் ஒன்றும் இல்லை. ஆனால், அதைக் குறுக்கி, சமைக்கத் தெரிந்தவன்தான் சாப்பாட்டுச் சுவை பற்றிப் பேச வேண்டும் என்பவனும் இல்லை. எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். அதற்கு என் கைவசம் சான்றிதழ்கள் எல்லாம் கிடையாது.

    “ஹே ராம்” ஒரு குழப்பமான படம். கமல் அதில் நிரம்ப உள்ளுறைகள் (subtext) வைத்து யாத்திருக்கிறார் என்பதும் உண்மைதான். ஆனால் காந்தியைப் புகழ்ந்து assimilate பண்ணுவது என்பது ஆர்.எஸ்.எஸ். பிற்காலத்தில் எடுத்த கொள்கைகளில் ஒன்று. சொல்லப்போனால் இது ஹிந்து தர்மத்தின் சர்வசதாக் கொள்கை (எ.டு. சக்தியை சிவனின் மனைவி என்றது; புத்தரை விஷ்ணுவின் அவதாரம் என்றது). அதைத்தான் ‘ஹே ராம்’ செய்கிறது. (ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’யும்).

    திரைமொழி கற்றவன் இல்லை நான். ஆனால் திரை-வலதில் (screen right) சரியான நிலைபாடு எடுப்பவரும் திரை-இடதில் தவறான கொள்கையரும் இருக்க வேண்டும் என்பது எனது இலக்கணம். அதன்படி, ‘முள்ளும் மலரும்’ சட்டக யாப்பு பல இடங்களில் உதைக்கிறது. தமிழனாக எனக்கு அர்த்தமாவது தமிழனல்லாதவனுக்கு அர்த்தமாகுமா என்னும் ஐயம் எழுகிறது.

    ||எந்த ஒரு கலைப்படைப்பையும் படைத்தவர் என்ன கருத்தில் படைத்திருப்பார் என்று தெரிய விரும்புவது இயல்புதான், ஆனால் அந்தக் கருத்தைத்தான் நாம் புரிந்து தீர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

    உண்மையில், சிறந்ததொரு கலைப்படைப்பு என்பது அதுவே ஒரு படுபொருள் (object) ஆக மாறிநிற்பது. வானில் பொங்கிநிற்கும் முகில் ஒரு படுபொருள். அது எனக்கு முயலாகத் தெரியும்; உங்களுக்குச் சிங்கமாக. ஒரு கல்லை எடுத்துக் கொண்டால் கூட, அதில் எனக்கு நான்கு சொட்டைகள்; உங்களுக்குப் பத்துப் பன்னிரண்டு தெரியுமாய் இருக்கும். அப்படி, ஒரு படுபொருள் எப்போதுமே எல்லையற்றது. ஒரு நல்ல படைப்பும்.

    அவர் தொடர்புபடுத்த எண்ணியது கிட்டாவிட்டால் என்ன, நமக்கு என்ன கிட்டுகிறதோ அதைக் கற்பித்துக் கொள்வோம். அது தவறில்லை, ஏனென்றால் வாசிக்கிறவன் கற்பித்துக் கொள்வதே நூல் (text)||

    இது என்னுடைய கலைக்கொள்கை. நேசமித்ரன் கவிதைகளுக்காக எழுதியது.

  • Rajesh Da Scorp ஓகே. உங்க நிலைப்பாடு தெளிவா புரியுது. திரை-வலது பற்றிய கருத்து எனக்கு ரொம்பப் புதுசு. அதேபோல, படுபொருள் பற்றிய கருத்து அருமை. ஆனா, நான் ஏன் இந்தக் கேள்வியை உங்க கிட்ட கேட்டேன்னா, இப்போ ஒரு இயக்குநர் இதெல்லாம் நினைச்சே பார்க்காம எடுத்துருக்காருன்னு வெச்சிக்கிட்டா, அதை நாம ‘ஆஹா ஓஹோ’ என்று விளக்கி, அதைப் படிப்பவர்கள் அப்படி எண்ணிக்கொண்டு, ஒரு மோசமான படைப்பு, நல்ல படைப்பு என்ற முகமூடியை மாட்டிக்கொண்டு பல காலத்துக்குப்பிறகு வெளிவந்துவிட்டால்?

    சிறந்ததொரு கலைப்படைப்பு என்பது சரி. ஆனால் மோசமான கலைப்படைப்பு என்பது சிறந்ததாக ஆக்கப்பட்டுவிட்டால்?

  • Raja Sundararajan நமக்கு ஓர் அரசியற் சார்பு இருந்தால் ஒழிய (அல்லது அந்த இயக்குநர் பால் என்னென்று விளங்காத ஒரு பக்தி இருந்தால் ஒழிய) ஒரு படத்தை அதன் தகுதிக்கு மீறிப் புகழ மாட்டோம். ஒரு வெள்ளந்தியான மனிதர், எப்போதும், தன் ரசனை சார்ந்தே ஒன்றைப் பரிந்துரைக்கிறார். அவருடைய ரசனை நேர்மையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். எனக்கு மிஷ்கின் பால் ஒரு மரியாதை இருந்தது. ("தமிழினி'யில் "அஞ்சாதே" பற்றி ஓஹோ என்று எழுதி இருந்தேன்). ஆனால் "யுத்தம் செய்" படத்தில் அவர் முன்வைத்த தகுதிக் கோட்பாடு அவரிடம் இருந்து என்னை முற்றாக விலக்கிவிட்டது, (மலம் அள்ளுபவன் மகனும் மந்திரம் ஓதுபவன் மகனும் வெறும் 'ஒன்று' அல்லது 'அரை' மதிபெண்ணுக்காக உயர்கல்வி நுழைவில் அடித்துக்கொள்வது நடைமுறை ஆகையால்). அது காரணம் எனது "முகமூடி" விமர்சனம் ஒருதலையானதோ என்று நான் அஞ்சினேன். ஆனால் உங்களைப் போன்ற திரைப்ப்ட ரசனை விற்பன்னர்களும் 'முகமூடி'யைக் கைவிட்டபோது என் விமர்சனம் வெள்ளந்தியானதுதான் என்று தெளிந்தேன். மோசமான கலைப்படைப்பைச் சிறந்ததென்று அயோக்கியனால் மட்டுமே சொல்ல முடியும். 'தினத்தந்தி'யில் "முகமூடி" விமர்சனம் எழுதிய ஆள் அப்படிப்பட்டவர்.

  • Rajesh Da Scorp ‎//மோசமான கலைப்படைப்பைச் சிறந்ததென்று அயோக்கியனால் மட்டுமே சொல்ல முடியும்// - இதை முழுமனதுடன் ஒப்புக்கொள்கிறேன். நீங்க சொன்னமாதிரி, இயக்குநர் அல்லது நடிகர்களின் மேல் இருக்கும் அளவுகடந்த பக்தியே சில சராசரி படங்கள் தகுதிக்கு மீறிப் புகழ் பெறுவதன் காரணம் என்பதை நானும் கவனித்திருக்கிறேன். ஆனால் அதில் என்ன விஷயம் என்றால், அதுவரை அந்தப் படத்தை விரும்பியவர்களே கூட, இப்படிப்பட்ட ஆஹா ஓஹோ விமர்சனங்களை படித்து அந்தப் படத்தை வெறுக்க ஆரம்பித்ததும் நடந்திருக்கிறது (நடந்தும் கொண்டிருக்கிறது). பொறுத்திருந்து பார்ப்போம்

Sep 3, 2012

Hey Ram- கமல் இந்துத்வா வெறியரா? \ 2000 \ ஹேராம் =019

நண்பர்களே...
‘ மீண்டு ’ வந்து விட்டேன்....

ஹேராமில்...
இப்போது நாம் காணவிருக்கும் காட்சிமிக முக்கியமானது...
கமல் ஒரு இந்துத்வா  வெறியர் என்பதற்கு முக்கிய சாட்சியாக இக்காட்சியையே  ‘கமல் எதிர்ப்பாளர்கள்’ குறிப்பிடுவார்கள்.
இது உண்மையா ? என ஆராய்ந்ததில் இரண்டு உண்மைகள் கிடைத்தன.
அந்த உண்மைகளை பதிவின் இறுதியில் சொல்கிறேன்... வாருங்கள்.

பார்வையற்ற இஸ்லாமியச்சிறுமியிடம் இருந்து கிடைத்த  ‘ஞானத்தால் ’
சாகேத் ராமின்  ‘ வெறி ’ அடங்கி  ‘ நெறி ’ ஆக்கிரமிக்கும் நேரம்...
தடை போட வருகிறது  ‘விதி’ அல்லது  ‘தருணம் ’.


சாகேத்ராமும்...அபயங்கரும்...துப்பாக்கியோடு ஒருவரை ஒருவர் எதிர் கொள்கிறார்கள்.
அபயங்கருக்கு பக்கபலமாக வந்திருக்கும் கூட்டத்தின் கைகளில் ஆயுதங்கள் பளபளக்கின்றன...கண்களில் வன்முறை பளபளக்கின்றன.
யார் இவர்கள் ?

சரித்திரத்தை பக்கம் ...பக்கமாக படித்து நான் தெரிந்து கொண்டதை சில வரிகளில் சொல்ல முயற்சிக்கிறேன்.

மனித சரித்திரத்தில்...முக்கிய பங்கு வகிக்கிறது மதம்.
 ‘ மிஷினரி ’ அமைப்பு கொண்ட  ‘ மதமே ’...தோன்றிய காலத்திலிருந்து  தொடர்ந்து உயிரோடு இயங்கி வருகிறது .
இந்த உண்மையை தெரிந்து கொண்டவர்கள்....
‘ இந்து மதத்திற்கும் ’ இப்படி ஒரு மிஷினரி அமைப்பை 1925 ல் தொடங்கி இருக்கிறார்கள்.
அதுவே  ‘ஆர்.எஸ்.எஸ் ’.


ராணுவப்பயிற்சியும்...கட்டுப்பாடும்...ஒரு சேர கற்பிக்கப்பட்டு...
செலுத்தப்பட்ட கூட்டத்தை...  சாகேத்ராம்   எதிர் கொள்வதை...
‘ இயக்குனர் ’ கமலின்,  ‘ ஷாட் கம்போஷிசனை ’ வர்ணிக்க எனது ஒட்டு மொத்த திரையறிவும் தேவைப்படுகிறது.
ஆயுதங்களோடு, ஆயத்தமாக ராணுவ அணிவகுப்போடு...
அணி வகுத்திருப்பதை...
கேமராவின்  ‘பேணிங் ஷாட்டும்’...
இளையராஜாவின்  ‘பேங்க் பேங்க் ’ இசையும்...
பார்வையாளர்களுக்கு ‘ வந்திருப்பவர்கள் யார் ? ’என அடையாளம் காட்டுகிறது.

இக்காட்சியின் அனைத்து ஷாட்களிலும்... ‘ போர்ஸ் & பவர் ’ இருக்கிறது.
இது  ‘திருவின்’ திருவிளையாடல்.

ராமின் பூணூலை அடையாளம் கண்டு கொண்ட அபயங்கர்... ‘அபிவாதயே ’ சொல்ல ஆரம்பிக்கிறான்.
 ‘அபிவாதயே’ என்றால் என்ன ?... என்பதை எனது பதிவுலக நண்பர் தெளிவாக விளக்கினார்.
அவருக்கு என் நன்றி.
 ‘அபிவாதயே ’ என்பது பிராம்மணர்களின் விசிட்டிங் கார்டு.
தனது குலம்..கோத்திரம்...இன்னார் வாரிசு...எனச்சொல்லி பெரியவர்களை வணங்கும் பழமையான முறை.
இன்றைய தலைமுறை... ‘அபிவாதயேயை’ சுருக்கி   ‘ஹாய்’
என இரண்டெழுத்து மந்திரத்தால் வழிபடுகிறது என மகிழ்ச்சியோடு தெரிவித்தார் நண்பர்.

 ‘அபிவாதே’ ஆங்கில மொழியாக்கம்....

Of Kaushik, son of Vishwamitra... 

Of Kaushik, thrice blessed... 

Of Kaushik, the high priest
of Yajur Veda...

Of Kaushik,
l bear my lineage.

அபயங்கர் அபிவாதயே சொல்லும் போது...
‘ செமி சர்க்கிள் ட்ராலி ஷாட்டில் ’படம் பிடித்து காட்டியுள்ளார்
‘ இயக்குனர் ’ கமல்.
 ‘ வந்திருப்பவர்கள் குறுகிய வட்டத்தில் இருப்பவர்கள் ’ என அடையாளப்படுத்தி உள்ளார்.
ஏன் ? அரை வட்டம் ஷாட் போட்டு நிறுத்தினார்?...
அந்த வட்டத்தில்  ‘ இது வரை ’ சாகேத்ராமும் இல்லை.
 ‘ படைப்பாளி ’ கமலும் இல்லை.
இருந்திருந்தால்...  ‘ முழு வட்டம் ஷாட் ’ போட்டு முடித்திருப்பார்
‘ இயக்குனர் ’ கமல்.
இந்த குறுகிய வட்டத்தில்  ‘ படைப்பாளி கமல் ’ இல்லாமல் இருப்பதை
‘ தெளிந்த ’ மனம் படைத்தவர்கள் மட்டுமே உணர முடியும் .
         Vande Materam
(Salutation to the Mother Goddess) 

Would you like
to hunt with us?

 ‘வேட்டை’ எனபது மன்னர் ஆட்சியின் குறியீடு.
மிருகங்களை வேட்டையாடுவது மன்னாராட்சி பொழுது போக்கு. ‘வேட்டையை’பற்றி... ஹேராமில் பின்னால் விரிவாக பார்க்க இருக்கிறோம்.

 ‘வேட்டைக்கு’ வர விரும்பவில்லை என்பதை...
 ‘ பின்னோக்கி நகர்ந்து... உடல் மொழியால்’ உணர்த்துகிறார் நடிகர் கமல்.
முதலில் சாகேத்ராம்-அபயங்கரை  ‘ஷாட் கம்போசிஷேனில்’ நெருக்கமாக காண்பித்தவர்...
 ‘பின் வாங்கலுக்குப்பிறகு’....
 ‘ சைஸ் ஆப் த ஷாட் கம்போசிஷேன் ’ [Size Of The Shot ] மெத்தடை உபயோகித்து...
சாகேத்ராம்---------அபயங்கர் இடைவெளியை அதிகப்படுத்தி காண்பித்திருப்பார்.

 ‘ சைஸ் ஆப் த ஷாட் ’ என்பது சினிமா மொழியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு கதாபாத்திரம் எந்த அளவு கம்போஸ் செய்யப்பட வேண்டும் என்பதை கதைச்சூழலை பொறுத்து...இயக்குனர் தீர்மானிக்கும் விஷயம்.
ஹேராமில், ‘ படைப்பாளி கமல் ’....  ‘ சைஸ் ஆப் த ஷாட்’ மூலம் சொல்லும் விஷயம்...
 ‘ வன்முறையிலிருந்து விலகி நிற்க விரும்புகிறான் சாகேத்ராம் ’
ஏனென்றால் ஹேராமில்...இந்த காட்சிக்கு பிறகு... சாகேத்ராம்  ‘சுயநலத்துடன்’ எந்த இடத்திலும் வன்முறையில் இறங்கவில்லை.

*********************************************************************************

‘ சைஸ் ஆப் த ஷாட் கம்போஷிசனில் ’ என்னை மிகவும் கவர்ந்த
‘ இன்னொரு லட்டை’ ...
தின்ன ஆசை இருந்தால்.... தொடருங்கள்.

தமிழ் திரையுலகின் மாமேதைகளுள் ஒருவரான மகேந்திரனின்
 ‘முள்ளும் மலரும்’ படத்தில்தான் அக்காட்சி இருக்கிறது.
 “ என்னை அநாதையாக்கி விட்டுப்போகாதே ” என கெஞ்சி நிற்பார் ரஜினி.
இங்கே ரஜினியை பெரிதாக  ‘ஷாட் கம்போசிஷேன்’ செய்திருப்பார் மகேந்திரன்.
ரஜினியை விலக்கி ஷோபா செல்லும்போது...ஷோபாவை பெரிதாக்கி...ரஜினியை சிறிதாக்கி ஷாட் கம்போசிஷேசன் செய்திருப்பார்.
ஷோபா மனம் மாறி...  ‘ பாசமலர்கள்’  ஐக்கியமான பிறகு...
நார்மல் கம்போசிஷேஷன் செய்திருப்பார் மகேந்திரன்.

தமிழ் சினிமாவின் மகத்தான காவியங்களில்  ‘முள்ளும் மலரும்’ ஒன்று என்பதை ஆணித்தரமாக இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

**********************************************************************************
இனி அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

 “ ஐயா...எங்களுக்கு இரண்டு உண்மை தெரிஞ்சாகணும் ”

“ அடடே..மறந்து விட்டேன்.

ஒன்று...கமல் ஜாதி,மத வெறியன்....
 என இக்காட்சியை வைத்து  ‘ கெக்கேபிக்கியவர்கள் ’....
நடிகர் கமல்...இயக்குனர் கமல்...படைப்பாளி கமல் என பிரித்துப்பார்க்க பழகாதவர்கள்....என்ற உண்மை.

இரண்டு... ‘அலைந்து திரிபவனுக்கு’....
‘சினிமா மொழி’.... தெரியாது என்ற உண்மை.

ஹேராமின் இக்காட்சியை... காணொளியில் காண்க....

முள்ளும் மலரும் காணொளி காண...