Sep 2, 2012

நடிகர் திலகம் பட்ட அவமானமே...வெகுமானம்.

என்னை பதிவுலகில் தொடர்ந்து அவமானப்படுத்தி புளகாங்கிதம் அடைந்து வரும் நல்லவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
என் வாழ்க்கையில் அவமானங்களே...என்னை உயரத்திற்கு தூக்கி சென்றிருக்கின்றன.
பாராட்டுக்கள்தான் படு குழியில் தள்ளியிருக்கின்றன.
ஒருவனை வீழ்த்த மிக எளிய வழி...அவனை பாராட்டுவதுதான்.

முதன் முதலாக எனக்கு விளம்பரப்படம் தயாரிக்க வாய்ப்பு வந்தது.
தமிழ் நாட்டிலேயே மிகப்பிரபலமான மாடல் கோஆர்டினேட்டர்
 ‘தாரா உமேஷை’ சந்திக்கச்சென்றேன்.

புராடெக்ட் என்ன?
 ‘லாட்டரி’ மேடம்.
லாட்டரியா ! நோ...நோ...நோ....என் மாடல் லாட்டரி விளம்பரத்தில நடிக்க மாட்டாங்க.
ஏன் மேடம்?
லாட்டரி விளம்பரம் எல்லாம்  ‘சீப் டெக்னீசியனை’ வைச்சு பண்ணுவாங்க...
 ‘எல்லாமே’ இந்த  ‘கோபால் பல் பொடி’ விளம்பர ஸ்டேண்டர்டுல இருக்கும்.
நீங்க...தப்பான இடத்துக்கு வந்தீட்டீங்க.
நான் ராஜீவ் மேனன்,பி.சி.ஸ்ரீராம் போன்றவர்களுக்கு மட்டும்தான் கோஆர்டினேட் பண்ணுவேன்.

மேடம்...நான்  ‘ராஜீவ் மேனன்’ படத்தில இருக்கிற அத்தனை டெக்னீசீயனையும் எனது படத்தில் இடம் பெறச்செய்கிறேன்.
நீங்களே அவர்களையும் கோஆர்டினேட் செய்து தாருங்கள்.
ஆனால் எனது போஸ்ட் புரடக்‌ஷன் மட்டும்...நான்  ‘எடிட் பாய்ண்ட்ல’ பண்ணிக்கிறேன்.

எனது  ‘இந்த வாக்கியம்’... அவரை வீழ்த்தி விட்டது.
 ‘எடிட் பாய்ண்ட்ல பண்றேன்னு’ கெஞ்சுறதும்... ‘ரஜினியை ஹீரோவா போட்டுக்கிறேன்னு’ கெஞ்சுறதும் ஒண்ணு.
[ இன்று என்னைப்போலவே... எடிட் பாய்ண்ட் ஸ்டூடியோவும் மண்ணோடு மண்ணாகிப்போய் விட்டது ]

அவரிடம் பேசியது போலவே...
ஒளிப்பதிவுவுக்கு...  ‘ஆர்.டி. ராஜசேகர்’
ஆர்ட் டைரக்‌ஷனுக்கு ‘ ராம் சந்திரசிங்’...
என முதல் படத்திலேயே ஜாம்பவான்களை நியமித்தேன்.
மாடலாக  ‘மிஸ் இந்தியா’ போட்டியில் வெற்றி பெற்ற பெண் நடித்தார்.
அந்த விளம்பரம்தான்...விளம்பர உலகில்  ‘டிரெண்ட் செட்டராக’ மாறியது.

பதிவெழுத என்னை ஊக்குவித்து அதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் எனது நண்பர் செந்தில் ராஜ் அவர்களே.
அவ்ர்தான் பதிவுலகில் ‘ தமிழ்க்குறிஞ்சி ’ என்ற இணைய பத்திரிக்கை நடத்தி வருகிறார்.
நான் பதிவெழுத வந்த போது...
கனவுகளின் காதலன்,
கீதப்பிரியன்,
கருந்தேள்,
கொழந்தை...
இவர்களைத்தான் கோலாக வைத்தேன்...இப்போதும் வைத்திருக்கிறேன்.
இவர்களது உயரத்தை தாண்ட உழைத்துக்கொண்டிருக்கிறேன்.
அதற்கான முயற்சிதான்  ‘ஹேராம் பதிவுகள்’.


[ கொழந்தை  வீடியோ பதிவு போட்டுகிட்டு இருக்கார்.
இவரது இரண்டாவது பதிவு பார்க்கவில்லை.
இனியும் பார்க்கப்போவது இல்லை.
ஆனால் கொழந்தையின் எழுத்துக்கு என்றும் ரசிகனாக தொடர்வேன்.
சமீபத்திய இவரது கமெண்ட்... ‘முகமூடியா..மூக்குல முடியா ’...
இந்த குசும்பு எனது ஆசான் சுஜாதாவிடம் மட்டுமே பார்க்க முடியும். ]



விளம்பரப்பட உலகில் இன்றும் எனது சில சாதனைகள் முறியடிக்கப்படவில்லை.
இருந்தும்... விளம்பரப்பட உலகில் நான் விழுந்ததற்கு காரணம் என்னை சுற்றி இருந்த ஜால்ராக்கள்.
அந்த சத்தத்தில் மதி மயங்கி விழுந்தவன் இன்று வரை எழுந்திருக்க முடியவில்லை.

இன்று பதிவுலகில் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்.
அவர்களை நான்  ‘தாரா உமேஷாக’ எடுத்துக்கொண்டு வளரப்போகிறேன்.
அவமானங்கள்தான்  ‘அடி உரம்’ .


நடிகர் திலகத்தையே  ‘பராசக்தி’ படத்திலிருந்து தூக்கி விட சிலர் சதி செய்தார்கள்.
அவர்கள் சொன்ன காரணம்... “ அவனுக்கு நடிக்கத்தெரியவில்லை...
சும்மா மீன் மாதிரி  ‘வாயை...வாயை’...பொளக்கிறான் ”.
அதே சதிக்கூட்டத்தின் வாரிசுகள்...பதிவுலகிலும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் எனது சொந்தக்காரன் நூறு கோடி வைத்திருக்கிற திமிறில்...  ‘அட்வைஸ்’ என்ற பெயரில் அவமானப்படுத்தினான்.
 “ உங்கிட்ட இருக்கிற பணத்துக்கு ஹிந்து பேப்பர்ல முழு பக்கத்துக்கு விளம்பரம் வரவழைக்க முடியும்.
உன்னைப்பாராட்டி ஒரு பக்கத்துக்கு கட்டுரை எழுத வைக்க முடியுமா?
எனக்கு எழுதி இருக்காங்க...”
வுட்டேன்...  ‘ஒரு குத்து ’...
நாக் அவுட்தான்.

பணம் இருந்தா... ‘முகமூடி’ன்னு படம் எடுக்கலாம்.
மூளை இருந்தா... ‘வழக்கு எண்’ணுன்னு படம் எடுக்கலாம்.

Sep 1, 2012

கமலுக்கு வந்த கோபம்...

நண்பர்களே....
இந்த போஸ்ட் மாடர்ண் உலகில் சகிப்புத்தன்மை வேகமாக குறைந்து வருகிறது.
சமீபத்திய எனது அனுபவங்கள்...இதை நிரூபித்து வருகிறது.

எனது அறுபது வயது நண்பர் ஒருவரை...முப்பது வயது ஆத்திரக்காரன் அடித்தே விட்டான்.
அவர் இந்தியாவில் முதன் முதலாக நியோ ரியலிச பாணியில் படமெடுத்த...திரையுலக மேதை நிமாய் கோஷை ஒளிப்பதிவாளராகப்போட்டு படமெடுத்த மாமேதை.
இயக்குனர் கே.பாலச்சந்தரின் முதல் படமான  ‘நீர்க்குமுழிக்கு’... ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ்தான்.
நாங்கள்  இருவருமே ஒருவருக்கொருவர் கருத்துக்களை பறிமாறிக்கொள்ளும் சினிமாக்காதலர்கள்.
நாங்கள் காதலிக்காத சினிமாக்காரர்கள் கிடையாது.
அப்படி சிலாகிப்போம்.
என்னைப்போலவே குசும்பன்.
தசாவதாரம் முதல் நாள் இரவுக்காட்சி பார்த்தோம்.
வெளியே வந்ததும் அவர் அடிச்ச கமெண்ட்...
“ அசினா வந்ததும்... கமலோன்னு ஒரு மயக்கம் வருது”

எங்கள் கோபம்...சட்டத்தின் வழியாக வெளியாகும்.
என்ன...கொஞ்சம் லேட்டா...அந்த கோபம் வெளிப்படும்.

கார்த்தி சிதம்பரம் பர்சனலாகத்தெரியும்.
பத்திரிக்கைகளில் தொடர்ந்து கருப்பு கண்ணாடி அணிந்து காட்சியளிக்கும் புகைப்படங்களே வெளியாகி வந்தன.
கருப்புக்கண்ணாடி அணிவதால் வரும் எதிர் விளைவுகளை...
நான் சொன்னதை...  ‘சகிப்புத்தன்மை இருந்ததால்’ ஏற்றுக்கொண்டு...
இப்போது வரும் புகைப்படங்களில்  ‘அப்பாவைப்போல்’ காட்சியளிக்கிறான்.

இருந்தாலும்...சகிப்புத்தன்மை சில சமயங்களில் ஒளிந்து கொள்ளும்.
 ‘ஆதிவாசி’ கோபம் விஸ்வரூபம் எடுக்கும்.
மகாநதி சூட்டிங்...
கமலின் மகளாக...பால்ய வயதுக்கு... ஷோபனா நடித்தாள்.
இளமைப் பருவத்துக்கு... நடிகை சங்கீதா ஒப்பந்தம் செய்யப்பட்டு கிளைமாக்ஸ் காட்சி உட்பட பலகாட்சிகள் எடுக்கப்பட்டு விட்டன்.
இடையில் வரும்  ‘கல்கத்தா சோனாக்காச்சி’ காட்சி கடைசியில் எடுக்கப்பட்டது.
கதைப்படி அவள் விபச்சார விடுதியில் ஜட்டி,பிராவோடு படுத்திருக்க வேண்டும்.
அதன் பின் அவளை கமல் கைகளில் ஏந்திய படி ஒடி தப்பிக்க வேண்டும்.
அக்காட்சியில் எனது மகள் நடிக்கமாட்டாள் என தீடிரென்று மறுத்து விட்டார் சங்கீதாவின் தாயார்.
இயக்குனர் சந்தான பாரதியும்,கமலும் எவ்வளவோ கன்வின்ஸ் பண்ணியும் மறுத்து விட்டார்.
தீடிரென்று கமல் டென்ஷனில் வெடித்து...அத்தனை அமில வார்த்தைகளையும் உமிழ்ந்து...
இறுதியாக  ‘பேக்கப்’ என கத்தியது... அவர் வாழ் நாளில்  ‘முதன் முதலாக’ வெளிப்பட்ட உச்சகட்ட கோபம்.
பின்னர் அதே போல் உருவ ஒற்றுமையுள்ள இன்னொரு பெண்ணை பயன்படுத்தி அக்காட்சியையும்...தூக்கத்தில் உளருகின்ற காட்சியும் எடுக்கப்பட்டது.
படத்தின் இறுதிக்காட்சியில் மட்டும்... ‘சங்கீதா’ மகளாக தோன்றுவார்.



இரண்டாவது கோபம் யூ ட்யூப்பில் இருக்கிறது.
பார்த்துக்கொள்ளுங்கள்.

முகமூடி படம் முதல் காட்சி பார்த்தேன். படம் ஆரம்பித்த அரை மணிநேரத்தில் தூங்கி விட்டேன். படம் பிடிக்கவில்லை என்றால் தூங்குவது எனது பலம். இருந்தாலும்... சமீபத்தில் எனக்கு தூக்கம் கம்மி. என்னை தூங்க வைத்த மிஷ்கினுக்கு... கோடானு கோடி நன்றி.