Apr 19, 2011

Picnic At Hanging Rock-1975[ஆஸ்திரேலியா]காணாமல் போன கன்னிகள்


நல்லசினிமாவை தொடர்ந்து கோவை மக்களுக்கு அறிமுகம் செய்து வரும்கோணங்கள் பிலிம் சொசைட்டிதான் இப்படத்தை திரையிட்டது.
உலகசினிமா அரங்கில் ஆஸ்திரேலியாவை தலை நிமிரச்செய்த படம்.
Picnic At Hanging Rock. ஜான் லிண்ட்சே என்ற நாவலாசிரியரின் மிகவும் புகழ் பெற்ற படைப்பு இது.
பீட்டர் வேர் இப்படத்தின் இயக்குனர்.

இப்படத்தில் கிடைத்த புகழால்... இவரை ஹாலிவுட்... கொத்திக்கொண்டு போய் விட்டது.

மர்ம நாவலின் கடைசி பக்கத்தை முதல் பக்கமாக அச்சிட்டது போல்....
“1900 வருடம் வாலன்ஸ்டைன் டே அன்று ஹேங்கிங் ராக் என்ற மலையில் சில பெண்கள் காணாமல் போனவர்கள் கண்டு பிடிக்க படவேயில்லை”என்ற எழுத்துக்கள் திரையில் ஒளிர படம் துவங்குகிறது.

அழகான மாளிகை ஆப்பிள்யார்டு பள்ளி....
அதை விட அழகான மாணவிகள்...
இந்த அழகுப்பெண்களில் பேரழகியாக மிரண்டா.


மொத்த பள்ளியுமே வாலன்ஸ்டைன் டே கொண்டாட்டத்தில் மிதக்கிறது.
உச்சக்கட்ட பரிசாக மாணவிகள் அனைவரையும் ஹேங்கிங் ராக்குக்கு பிக்னிக் அனுப்பி வைக்கிறார் பள்ளியின் நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியை திருமதி.ஆப்பிள் யார்டு.


மிரண்டாவின் உயிர்த்தோழி சாராவுக்கு மட்டும் பிக்னிக் கட்.
ஏன்?
 வாலன்ஸ்டைன் டே பற்றிய கவிதையை மனப்பாடம் செய்து ஒப்பிக்காததால் இந்த தண்டனையை வழங்குகிறார் திருமதி.ஆப்பிள் யார்டு.
சாரா புத்தகத்தில் உள்ள கவிதையை சொல்ல மறுக்கிறாள்.
சொந்தமாக தானே இயற்றிய கவிதையை சொல்லுகிறாள்.
புத்தகத்தில் இருப்பதையே வாந்தி எடுத்தால்தான் மார்க் போடும் நம்ம ஊர் பள்ளியின் வடிவம்தான் ஆப்பிள் யார்டும்..

மலைக்கு போன மாணவிகள் ஒரே கொண்டாட்டம்தான்.

இவர்கள் வந்த கோச் வண்டியை ஒட்டி வந்தவரும், மிஸ்.மக்ரோ என்ற ஆசிரியையும் தங்களது கடிகாரம் 12 மணியில் நின்று போனதை உணர்கின்றனர்.
இதுதான் ஹேங்கிங் ராக்கின் அமானுஷ்யத்தை விளக்க இயக்குனர் போட்ட முதல் முடிச்சு.
மலையில் முக்கால் பாகம் பசுமை....கால் பாகம் வெறுமை.


அந்தப்பாறையில் உள்ள கவர்ச்சியில் கவரப்பட்ட மிரண்டாவும் அவளது தோழிகள் மூவரும் துணைக்கு வந்த ஆசிரியை மிஸ்.மக்ரோவிடம் அனுமதி பெற்று மலையின் மேற்பகுதிக்கு செல்கின்றனர்.

இக்காட்சிகளில் ஒலிக்கும் பின்னணி இசை அந்தப்பகுதியின் அமானுஷ்யத்தின் குரலாக ஒலித்து நம்மை மிரள வைக்கிறது.
ஓளிப்பதிவும் இப்பணியை ஒசையில்லாமல் செய்கிறது.
இக்கன்னிகளை அவர்களறியாமல் தொடர்கிறார்கள் இரு வாலிபர்கள்.
இவர்கள்தான் இந்த மர்ம நாவலின் இரண்டாவது முடிச்சு.

மலை உச்சிக்கு போன நான்கு இளம் பெண்களும் களைப்பாகி மலையின் மடியில் படுத்துறங்குகின்றனர்.
இவர்கள் மட்டுமல்ல...அடிவாரத்தில் உள்ள அனைவருமே உறங்குகின்றனர்.

இந்த தூக்கம்... பின்னால் வரப்போகும் துக்கதுக்கு டிரைலர்.
இந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு எழுந்து மிரண்டாவும் அவளது இரு தோழிகளும்...
ஒரு பாறைப்பிளவில் செலுத்தப்பட்டது போல்....
ஹிப்னாட்டிச மயக்கத்தில் நடப்பது போல்....
நடந்து சென்று மறைகிறார்கள்.

இவர்களுடன் வந்த ஒரு குண்டுப்பெண் மட்டும் அலறிக்கொண்டு திரும்பி ஒடுகிறாள்.
இங்கே மலையடிவாரத்தில் இருந்தவர்களில் மிஸ்.மக்ரோவும்...  ' மிஸ் '.
ஆக நாலு பேரை தொலைத்துவிட்டு பதறியடித்து திரும்புகிறது பிக்னிக் குழு.
இவர்கள் காணாமல் போன மர்மத்தை தேடியலைகிறது படம்.
படம் பார்க்கும் அனைவரையும் தேட வைப்பதில் வெற்றி காண்கிறார் இயக்குனர்.
இப்படத்தின் பின்னணி இசை முன்னணியாக இருப்பதற்க்கு காரணம் இவர்கள்தான்...
பீத்தோவன்...மொஸார்ட்....பாக்.....

இந்த மும்மூர்த்திகளின் இசைக்கோர்வைகளை மிகச்சரியாக பின்னணி இசையாக இழைத்தவர்கள் Bruce Smeaton&Gheorghe Zamfir
[இவரது Pan Flute இசைக்காகவே, இரண்டு தடவை படத்தை பார்க்கலாம்].

ஒளிப்பதிவு இப்படத்தின் இரண்டாவது கண்.
இந்த ஆஸ்திரேலிய சந்தோஷ்சிவனின் பெயர்...ரஸ்ஸல் பாய்ட்.

இதற்கு இணையான மர்மப்படம் பொன்னர் சங்கர்.

1 comment:

  1. விமர்சனம் அருமை அண்ணா.
    இந்த படத்தை பற்றி கொஞ்ச நாளுக்கும் முன்னால் ஐம்டிபியில் படித்துவிட்டு ஏதாவது தமிழில் விமர்சனம் வருமா என்று தேடிக்கிட்டிருந்தேன்.எதர்ச்சையா உங்க வலைக்கு வரும்போது இந்த படத்தோட விமர்சனம் பார்த்து ரெண்டு தடவ படிச்சிட்டேன்..
    நல்ல படமென்று நினைக்கிறேன்.பதிவிறக்கம் செய்ய இருக்கிறேன்.
    நன்றிகள் பல.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.