Jul 14, 2013

இயக்குனர் ஹரி, ஒரு ‘அரைகுறை’.


நண்பர்களே...
இயக்குனர் ஹரி தெற்கத்தி சீமை பழக்க வழக்கங்களை,
தனது படங்களில் சாமர்த்தியமாக நுழைத்து வருபவர்.
சிங்கம் 2 படத்திலும்,
இதே வித்தையை தொடர்ந்திருக்கிறார்.
அதற்கான  பாராட்டை பிடியுங்கள், ஹரி...முதலில்.
கை கொடுங்கள்.
அப்படியே கொஞ்சம் குனியுங்கள்.
‘நங்’.

“ ஒரு வேலை செய்தா உருப்படியா செய்யணும்.
‘அரைகுறையா’ செய்யக்கூடாது ” 

“ நிறுத்தும்...வேற யாராவது இப்படி பேசுனா...
ஜோலியைப்பாரும்னு சொல்லிருவேன்.
உம்ம மேல கொஞ்சம் மருவாதி வச்சிருக்கேன்.
சொல்லும்வே...அப்படி என்னவே செஞ்சுட்டேன் ”

“ சூர்யா, சிங்கம்-2 படத்துல...ஒரு சீன்ல...
 ‘அப்பா...நாராயணசாமியை கும்பிடறவங்க.
அதனாலே சனி,ஞாயிறு நான் - வெஜ் சாப்பிட மாட்டேன்னு’...
சொல்றாருல்லா.
தகவலை... தப்பால்ல சொல்லுதிய”

“ என்ன தப்பு”

“ நாராயணசாமியை கும்பிடறவங்க வெள்ளி, ஞாயிறுதான் அசைவம் சாப்பிட மாட்டாங்க.
நீரு..சனி,ஞாயிறுன்னு சொல்லிட்டியளே!
அப்புறம் நாராயணசாமியை கும்பிடறவங்க நெத்தியில எப்பவும் திருநாமம் இருக்கும்.
ராதாரவிக்கு படத்துல ஒரு இடத்தில கூட நாமத்தை சாத்தி காட்டலியே!”

“ ஒரு நிமிஷம்...அலோ யாரு அனுஷ்காவா? சிங்கம் 3யில கிராபிக்ஸ் எங்கே வைக்கிறதுன்னு டிஷ்கசன் போயிட்டிருக்கு” 



“ அலோ...ஹரி சார்வாள்...எங்க போறிய?” 



நண்பர்களே... ‘நாராயணசாமி’ என்றால்...
‘15 நாளில் கூடங்குளம் மின்சாரம்தான்’ ஞாபகத்துக்கு வரும்.
இந்த  ‘நாராயணசாமி’... பகவான் ஸ்ரீவிஷ்ணுவை குறிப்பதாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திரு.முத்துக்குட்டி என்பவர் பிறந்து வளர்ந்து
ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடினார்.
இவர் காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களை,
ஆதிக்க சக்திகள்... கடவுளின் பெயரால் மிகக்கொடூரமாக நடத்தி இருக்கிறார்கள்.
பெண்கள் தங்கள் மார்பை மறைத்து ஆடையணியக்கூடாது என சட்டம் போட்டிருக்கிறார்கள் ஆதிக்க சக்திகள்.


தோள் சீலை போராட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள விக்கிப்பீடீயாவிற்குள் செல்க...

‘தோள் சீலை போராட்டம்’ பற்றி நண்பர் ஜோதிஜி எழுதிய அட்டகாசமானப்பதிவைக்காண இந்த இணைப்பில் செல்க...

ஆதிக்க சக்திகளை எதிர்த்து புதிய வழிபாட்டு முறையை உருவாக்கினார் திரு.முத்துக்குட்டி அவர்கள்.
ஆலயத்தில் உருவ வழிபாடு கிடையாது.
கருவறையில் பெரிய நிலைக்கண்ணாடி + தீபம்.
இதையே வழிபடச்சொன்னார்.
பெண்கள் மார்பை மறைத்து ஆடை அணிந்துதான் கோயிலுக்கு வரவேண்டும்.
ஆண்கள் துண்டை தலைப்பாகை கட்டி வரவேண்டும்.


ஆண்களும் பெண்களும் சமமாக கருவறை வரை சென்று வழிபடலாம்.
வருகின்ற பக்தர்ளுக்கு,
பூசாரிகள் தங்கள் கைகளால் தொட்டு நெற்றியில் திருநாமம் சாத்த வேண்டும்.
சாதி, சமய வேறுபாடு இல்லாமல்,
அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக அமர்ந்து...
சம பந்தி போஜனம் செய்ய வேண்டும்.
ஆலயம் பகலில், பாடசாலையாக இருக்க வெண்டும்.
இரவில், வழிபாட்டு தலமாக மாற வேண்டும்.

‘அய்யா...சிவ..சிவ..அரகரா...அரகரா...” என தூய தமிழில் வழிபாட்டுப்பாடல்கள் இயற்றினார்.
சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றிணைத்தார்.


இவரது அருளுரை ‘அகிலத்திரட்டு’ என்ற நூலாகும்.
இவரை பின்பற்றிய மக்கள் ‘அய்யா வழி மக்கள்’  என்றழைக்கப்பட்டார்கள்.


இன்றும் இவரை பின்பற்றி வழிபட்டு வருகிறார்கள்.
ஆனால் அவர் காட்டிய வழியில் அல்ல.
எளிமையின் சின்னமாக விளங்கிய கோயில் இன்று ஆடம்பரத்தை சுமந்து நிற்கிறது.
வானுயர்ந்த ராஜகோபுரம், கிரனைட் கற்கள் பதிக்கப்பட்ட சுவர்கள்,
மார்பிள் தரைகள் என மிரட்டி வருகிறது.
கழுத்தில் தங்கச்செயினும், பிரேஸ்லெட்டும் போட்டு ....
ஆடி, பி.எம்.டபிள்யூ, பென்ஸ் காரில் வரும் பக்தர்களுக்கு நாமம்  ‘பவ்யமாக’ இடப்படுகிறது.
ஏழைகளுக்கு ‘ஸ்மால் நாமம்’ சாத்தப்படுகிறது.


அய்யா வழி மக்கள் திருமணச்சடங்கு,
தூய தமிழில் எளிமையாக நடக்கும்.
இன்று ‘அய்யரை’ வைத்து சமஸ்கிருத மந்திரங்கள் முழங்க ஹோமம் வளர்த்து நடத்துகிறார்கள்.

அய்யா வழித்தலங்களில் இன்றும் பழைய முறைப்படி,
 ‘தவணைப்பாலும், உண்பான் சோறும்’...
‘தருமமாக’ வழங்கப்படுகிறது.

தருமம் = இலவசம்.
தவணைப்பால் = பச்சரிசி சோற்றை குழைய வைத்து தண்ணீரை நிறைய ஊற்றி உப்பும் போட்டு வழங்கப்படுவது.
உண்பான் சோறு = புழுங்கல் அரிசி, துவரம் பருப்பு,
பச்சை மிளகாய், கத்தரிக்காய், வாழைக்காய் போன்ற அனைத்து காய்கறிகளையும் ஒன்றாக போட்டு சமைத்து செய்யப்படும் ‘கலவை சாதம்’.

தவணைப்பால் கஞ்சி, உம்பாஞ்சோறு [ உண்பான் சோறு மருவியது ]
இரண்டுமே எனது  ‘பேவரைட்’.
இதற்காகவே இந்த வழிபாட்டுத்தலத்துக்கு போய் சாப்பிட்டு விட்டு ‘எஸ்ஸாகி’ விடுவேன்.


என்னைப்பொறுத்தவரை திரு.முத்துக்குட்டி அவர்கள் ,
‘சேகுவேரா’, ‘பிரபாகரன்’ போன்று போராளி.


காலப்போக்கில்,  ‘ஜீஸஸ் , நபிகள் நாயகம், புத்தர்’ போன்று,
இவரையும் தெய்வமாக்கி விட்டார்கள்.

இவரைப்புனிதமாக்க ‘கற்பனை வரலாற்றுப்புனைவுகளும்’ பெருகி வந்து விட்டது.

இயக்குனர் ஹரி புண்ணியத்தில் ‘கருப்பட்டி’, ‘அய்யா வழி’ பற்றி,
எனக்குத்தெரிந்த தகவல்களை சொன்னேன்.
குறைகள் இருந்தால் மன்னிக்கவும்.

“ அய்யா...சிவ...சிவ...அரகரா...அரகரா...

....அய்யா... அறிந்தும் அறியாமல் செய்த பிழைகளை... 
பொறுத்து ‘மாப்பு’ தரணும்”.

மாப்பு = மன்னிப்பு.

திரு.முத்துக்குட்டி அவர்கள் வரலாறை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் செல்க...

அடுத்தப்பதிவு...இங்கிருந்து ஒரே ஜம்ப்...‘ஆமென்’.


Jul 12, 2013

சிங்கம் 2 - அனுஷ்கா ‘காட்டிய’ குறியீடு.


நண்பர்களே...
சிங்கம் 2ஐ பார்த்திருப்பீர்கள்.
அனுஷ்கா, அஞ்சலி, ஹன்சிகா போன்ற ஆர்.டி.எக்ஸ்கள் வெடிக்கும் போது நீங்கள் எதை கவனித்தீர்களோ...அதைத்தான் நானும் கவனித்தேன்.
இந்த விஷயத்தில் நாம்  ‘சேம் பிளட்’.

இந்தப்பதிவுல நீங்கள் எதை எதிர் பார்த்து வந்தீர்களோ...
அது கிடையாது.
எங்க...தப்பிச்சு ஓடப்பாக்கிறீங்க ?
டேய்...  ‘ரன்’ மாதவா...
எல்லாரையும் உள்ள வச்சு...  ‘ஷட்டரை’ இறக்கி மூடு.
ஒரு ஆளு... தப்பிச்சு போகக்கூடாது.

சிங்கம்- 2 படத்தில்,  ‘சில நல்ல விஷயங்களை’ வெகு அழகாக இயக்குனர் ஹரி திணித்திருக்கிறார்.
தெற்கத்தி காலாச்சாரத்தை...வாழ்வியலை,
தனது படங்களில் எப்போதுமே இயக்குனர் ஹரி சொல்லி வருபவர்.
அதற்காக எனக்கு இயக்குனர் ஹரியை ரொம்ப பிடிக்கும்.


சிங்கம்- 2வில், அனுஷ்கா ‘கருப்பட்டி’ வாங்க அலைவார்.
இன்றைய தலைமுறைக்கு, அனுஷ்கா வழியாக...
‘கருப்பட்டியை’ கடத்திய விதத்தை நான் மிகவும் ரசித்தேன்.


‘கருப்பட்டி’... பனை மரத்தால் நமக்கு கிடைக்கும்  ‘வைரம்’.
 ‘பனை வெல்லம்’ என பல இடங்களில் அழைக்கப்படுகிறது ‘கருப்பட்டி’.
'பனை மரம்’ நமக்கு ‘மூலிகை விருந்துகளாக...
’நுங்கு, பதநீர், கள், பனங்கிழங்கு, பனங்கற்கண்டு, பனம்பழம்,பனங்குருத்து,
என பலவற்றை வாரி வழங்கினாலும்...
‘மாஸ்டர்பீஸ்’ கருப்பட்டிதான்.


நாகரீகம் நமக்கு கற்றுக்கொடுத்த தலையாய சீரழிவில் மிக முக்கியமானது  ‘சர்க்கரை’.
சர்க்கரை, அஸ்கா, சீனி என வெவ்வேறு பெயர்களில் அழைக்கபட்டாலும், இதை  ‘விஷம்’ என ஒரே பெயரிட்டும்  அழைக்கலாம்.
இந்த ‘ஸ்லோ பாய்சனை’ சாப்பிட்டுத்தான் நாம் பல நோய்களை,
‘வெற்றிலை-பாக்கு’ வைத்து வரவேற்கிறோம்.

‘கருப்பட்டி காப்பியை’ குடிப்பது ஆரோக்கியம்.
பால் கலக்காமல் குடிப்பது பரம ஆரோக்கியம்.
எங்கள் கிராமத்தில் ‘சொம்பில்தான்’ காப்பி தருவார்கள்.
 ‘பச்சை பனை ஓலையில்’ செய்யப்பட்ட ‘பட்டையில்’...
காப்பியை ஊற்றிக்குடித்தால்...
ஆஹா...அது அமிர்தம்.
இந்த அமிர்தம் எவ்வளவு குடித்தாலும் ‘விஷம்’ ஆகாது!

கருப்பட்டியில் செய்யப்படும் ‘பொருள்விளங்காய்’ என்ற  ‘தின்பண்டத்தை’ நெல்லைச்சீமையில்,
திருமண வீட்டார்... ஊருக்கே வழங்குவது பாரம்பரிய பழக்க வழக்கம்.
இந்தப்பழக்கத்தை ‘லட்டாக’ மாற்றி,
‘ஸ்வீட் ஸ்டாலை’ வாழ வைத்து...
நல்ல பழக்கத்தை சாகடித்து விட்டார்கள்.

‘கார்த்திகை திருநாள்’ பண்டிகைக்கு,
கருப்பட்டி + பச்சரிசி மாவு கலந்து...
‘பனை ஓலைக்குள்’ திணித்து...
பெரிய மண் பானையில் வைத்து  ‘அவித்து’...
‘ஓலைக்கொழுக்கட்டை’ செய்வார்கள்.
'பனை ஓலை கொழுக்கட்டை’ செய்ய மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பில் செல்லவும்...



தின்னத்தின்ன திகட்டாது.
தின்ன  அத்தனை கொழுக்கட்டைகளும்,
நம் உடம்பில் சக்தியாக மாற...
அனுஷ்கா போன்ற  ‘செம்ம்ம்மக்கட்டைகளை’ தேடுவோம்.


இப்போது  ‘கருப்பட்டிக்கு’ பதிலாக,
‘சர்க்கரையில்’ செய்யப்பட்ட...
‘விஷக்கொழுக்கட்டைகள்’ செய்கிறார்கள்  ‘நாகரீக அம்மணிகள்’.
அதுவும் ‘பிரஷர் குக்கரில்’.
வெளங்கிரும்.

குக்கர் என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது.
எழுத்தாளர் ‘சாரு’ தனக்கு ‘குக்கர் பரிசு’ கிடைக்கும் என ரொம்ப நாளாக கதைத்து வந்தாரே...கிட்டியதா?
‘சாரு’ன்னதும்  ‘பெக்’ ஞாபகத்துக்கு வந்திருச்சு.
இருங்க...‘கருப்பட்டி காப்பி’,
ஒரு  ‘லார்ஜ் பெக்’ போட்டுட்டு வர்றேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்பது வரை இந்த அனுஷ்காவை பார்த்துக்கொண்டிருங்கள்.