Dec 29, 2012

2012ல் சிறந்த படம் வழக்கு எண் 18 \ 9... ஏன் ? ஏதற்கு ?? எப்படி ???


நண்பர்களே...
‘மூளைக்கு’ வேலை கொடுக்கும் பதிவுகளையெல்லாம் மூட்டை கட்டி 2013க்கு தள்ளி விட்டேன்.
கடுமையான வேலைப்பளு இருப்பதால்...
மிக மிக  ‘லைட்டாக’ எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
பொறுத்தருள்க.

இந்த ஆண்டின் சிறந்த படமாக ‘வழக்கு எண் 18 \ 9 தேர்வு செய்ததற்கு காரணம்,
இந்தப்படம்தான் இந்த வருடம் வெளியான படங்களுக்குள் மிகச்சிறந்தது.
இந்தப்படம் இன்னும் கொஞ்சம் மேம்பட்டு இருந்திருந்தால் இந்தியாவிலேயே சிறந்த படம் என்று கொண்டாடி இருப்பேன்.
பாலாஜி சக்திவேலுடன்...பிற தொழில் நுட்பக்கலைஞர்களும்
அவருக்கு இணையாக திறம்பட பணியாற்றியிருந்தால்...
இப்படம்  ‘ஹேராம்’ தரத்தை தொட்டிருக்கும்.

இந்தப்படத்தை ஆஸ்காருக்கு அனுப்பாமல் ‘பர்பி’ என்ற பம்மாத்து திரைப்படத்தை அனுப்பிய முட்டாள்கள் என் கையில் கிடைத்தால்
அறம் பாடியே அழித்திருப்பேன்.
‘வழக்கு எண்’ திரைப்படம் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டிருந்தால்,
விருது கிடைக்கிறதோ இல்லையோ...
முதன் முதலாக விருதுக்கு போட்டியிடும் பட்டியலில் இப்படம் இடம் பெற்றிருக்கும்.
‘நாமினியாக’ நிச்சயிக்கப்பட்டிருக்கும்.
தமிழன் இரண்டாம் முறையாக ஆஸ்கார் அரங்கில் இடம் பெற்றிருப்பான்.

‘பர்பி’ படத்தை பார்த்து...வெள்ளைக்காரன் சிரித்திருப்பான்.
“இன்னும்  ‘சார்லி சாப்ளின்’ படத்தை காப்பியடிச்சுகிட்டு இருக்கீங்களா!
நீங்க இன்னும் வளரவேயில்லையா! ”... என நக்கலடித்திருப்பான்.

ஒரு படம் வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாவில் பங்கு பெற்று விருது பெற தயாரிப்பாளர்தான் முயற்சி எடுக்க வேண்டும்.
வழக்கு எண் தயாரிப்பு நிறுவனம்  எப்படிப்பட்டது? எனத்தெரியவில்லை.

ஹேராம் தொடர் முடிந்ததும் வழக்கு எண்ணை ஆய்வு செய்து ஒரு தொடர் எழுத எண்ணி உள்ளேன்.
இந்தப்பதிவில் வழக்கு எண்ணின் சிறப்பம்சங்களில் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.


முதலில் படத்தின் கதாநாயகனை பார்ப்போம்.
இப்படத்தின் கதாநாயகன் போலிஸ் இன்ஸ்பெக்டர்தான்.
அவன்தான் இக்கதையை இயக்குகிறான்.
அவன்தான் கதையின் மர்ம முடிச்சுகளை போடுகிறான்.
அவன் மூலமாகத்தான் பணமும்,ஜாதியும்,அதிகாரமும் இயங்குகிறது.
உண்மையை குலைக்கிறது.

படம் முழுக்க நிறைய காட்சிகளில் வருபவன்தான் கதாநாயகன் என்பது அல்ல.
பாலாஜி சக்திவேலின் கதாநாயகர்கள் வெளிப்படையாக தெரிய மாட்டார்கள்.
நாம்தான் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.
‘காதல்’ படத்திலேயே கதாநாயகனை கடைசிக்காட்சியில்தான்
அறிமுகப்படுத்துவார்.

படத்தில் வரும் சின்னச்சின்ன விஷயங்களைக்கூட மிக நுட்பமாக ஆய்வு செய்து படத்தில் இடம் பெறச்செய்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.
படத்தின் கதாநாயகி ஜோதியின் மீது ஆசிட் வீசப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதாக ஷாட் போட்டிருப்பார்.
சென்னை அரசு மருத்துவமனைகளில் கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அரசு மருத்துவமனைதான் தீக்காயம், ஆசிட் வீச்சு சிகிச்சைக்கு புகழ் பெற்றது.
தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு வாழை இலையில் கிடத்தப்பட்ட  உருவத்தை
ஸ்ட்ரெச்சரில் தள்ளிக்கொண்டு போவதை வேறோரு ஷாட்டில்  ‘கமிட்’ பண்ணியிருப்பார் பாலாஜி சக்திவேல்..

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மாமேதை கார்ல் மார்க்ஸின் முதலாளித்துவம் பற்றிய கருத்தாக்கத்தை கதையாக்கி காவியம் படைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

“ முதலாளித்துவத்தில் மனித உறவுகள்...பண உறவுகளாகி விட்டன.
புனிதங்கள்...புனிதங்களை இழக்கின்றன”.

கந்து வட்டிக்கு பணம் கொடுத்த  ‘மிருகம்’ மனிதத்தன்மையில்லாமல் வரம்பு மீறி பேசுகிறான்.

“ உன்னையை ஊர் மேய விட்டா, பத்து காசு தேறாது”.

பணம் ஏழைகளின் கிட்னியை விலைக்கு வாங்குகிறது.
பள்ளிக்கு போகும் சிறுவர்களை குறி வைத்து பணம் கொடுத்து விலைக்கு வாங்கி கொத்தடிமையாக்குகிறான் ஒரு புரோக்கர்.
முறுக்கு கம்பெனிக்காரன் பணம் கொடுத்து வாங்கிய கொத்தடிமையை இழந்து விடுவோம் என்ற காரணத்தால்...
பெற்றோர்கள் இறந்த செய்தியையே மறைக்கிறான்.

பணம் படைத்த காரணத்தால்  ‘பரத்தை’ பள்ளிக்கூடம் நடத்துகிறாள்.
அவள் நடத்தை அறிந்த மகன் ஐம்பதாயிரம் ரூபாயை மிரட்டி கேட்கிறான்.
பள்ளி செல்லும் வயதில் புழங்கும் மித மிஞ்சிய பணம்,
சிறுவனை காம விளையாட்டில் ஈடுபட வைக்கிறது.
இறுதியில், ஆசிட் அடிக்கும் பயங்கரவாதியாக்குகிறது.



கூத்து கட்டும் சிறுவன் பெண் வேடமிட்டு ஆடும் போது அவன் மார்பில் பணம் குத்தப்பட்டிருக்கும்.
அவனை கலைக்கண்ணோடு பார்க்காமல்,
காமக்கண் கொண்டு பார்த்த ‘சாரு கேசிகள்’ குத்திய பணம் அது.

பணம்தான், இன்ஸ்பெக்டரை உண்மையை திரித்து பொய் வழக்கு போட வைக்கிறது.

வேலு பசியால் மயக்கமுற்றிருக்கும் போது  ‘பாலியல் தொழிலாளி ரோஸி’
 ‘மனித நேயத்தால்’ பணம் கொடுத்து இட்லி வாங்கி கொடுக்கிறாள்.
இங்கே பணம், ரோஸியிடமிருக்கும் மனிதநேயத்தை வெளிக்கொண்டு வருகிறது.

அதே  ‘பாலியல் தொழிலாளி ரோஸி’ நோய்வாய்ப்பட்டு நலிந்திருக்கும்போது, வேலு  ‘சகோதரனாய்’ பணம் கொடுக்கிறான்.
இங்கே பணமே, புனிதமாகிறது.

பணம் மனிதனை மிருகமாக்கும் அல்லது மனிதநேய மிக்கவனாக்கும்.
இந்த  பணத்தை எப்படி கையாளப்போகிறீர்கள்? என்ற கேள்வியை பார்வையாளரிடம் வீசி உள்ளார் பாலாஜி சக்திவேல்.


திரையுலக மேதை ராபர்ட் பிரஸ்ஸான்,
தனது படைப்பான  'L' ARGENT' [ 1983] படத்தில்,
பணம் காஸ் & எபெக்டில் இயங்குவதை படமாக்கியிருக்கிறார்.
L' Argent \ 1983 \ France \ Directed by Robert Bresson.

பாலாஜி சக்திவேல்,
தனது படத்தில்...  ‘பணம்’ படம் முழுக்க ‘தீமெட்டிக்காக’ இயங்குவதை... படமாக்கியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில்,
‘இக்கதையில் வரும் சம்பவங்கள், குறியீடுகள் யாவும் கற்பனையே...
யாரையும் குறிப்பிடுவன அல்ல’...என்ற டைட்டில் கார்டில் ஒரு ’பொய்யை’ சொல்லி விட்டு...
படம் முழுக்க உண்மைகளை புதைத்து வைத்து விட்டார் பாலாஜி சக்திவேல்.

அவரது குறியீடுகளுக்கு  ஒரே ஒரு சாம்பிள்...

கதாநாயகனான இன்ஸ்பெக்டர்,
 ‘ரோட்டுக்கடையில்’ வேலை பார்க்கும் இளைஞனை விசாரிக்கும் காட்சி...

இளைஞன் : “ எங்க ஊர்ல விவசாய நிலத்தையெல்லாம் அழிச்சு...
பிளாட் போட்டு வித்திட்டதாலே...
ரொம்ப பேத்துக்கு வேலையில்லாம போச்சு”

அவன் பேசும் போது திரையை ‘பிளாக் அவுட்’ பண்ணி காலத்தையும் இடத்தையும் கடக்கிறார் இயக்குனர்.
‘பிளாட் போட்டு வித்திட்டதால’ என்ற டயலாக்கின் போது,
‘வசந்தம் கோல்டு சிட்டி’ என்ற ரியல் எஸ்டேட் வியாபாரிகள் நிறுவிய போர்டும்....
‘பிளாட்’ போட்டு பிரிக்கப்பட்ட நிலமும்  ‘ஷாட்டில்’ இருக்கும்.

‘ரொம்ப பேத்துக்கு வேலையில்லாமல் போச்சு’ என்ற டயலாக்கின் போது
‘வைட் ஷாட்டில்’ ஃபோர் கிரவுண்டில் கத்தாழை இருக்கும்.
பேக்கிரவுண்டில் ஊரைக்காலி பண்ணி சில  குடும்பங்கள் போய்க்கொண்டிருக்கும்.
புல் பூண்டு இல்லாத வறண்ட பெரிய நில பரப்பை ஒரே ஷாட்டில் கம்போஸ் செய்திருப்பார் இயக்குனர்.
கிராமத்தில் வளமை இல்லை...வறுமை இருக்கிறது என்பதற்கு குறியீடாக
செழித்து வளர்ந்திருக்கும் ‘கத்தாழையை’  ஃபோர்கிரவுண்டில் வைத்து
ஷாட் கம்போஸ் செய்த பாலாஜி சக்திவேலை,
உலகசினிமா இயக்குனர் என்றால்...
‘நாஞ்சில் நாட்டு நாட்டாமைக்கு’ நட்டுக்குது.
அந்த அரை வேக்காட்டு  ‘பிரதாபங்கள்’ இனி எடுபடாது.
படத்தில் வரும் கனவுக்காட்சியில் [ மேலே உள்ள படம்]
கடந்த காலம்,நிகழ் காலம்,வருங்காலம்
என முக்காலத்திலும் ‘பாஸிட்டிவ்’ நிகழ்வுகளே நடக்கும்.
இக்காட்சி  ‘டைட்டானிக்’ [ 1997 ] கிளைமாக்ஸ் காட்சிக்கு இணையாக இருக்கும்.
டைட்டானிக் இறுதிக்காட்சியில்  ‘ரோஸ்’ உயிர் பிரியும் தருவாயில்,
அவளது நனவுலகில்,  ‘ஜேக்குடன்’ இணைவதை காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்.
அப்போது அந்த ஜோடியை சுற்றி  ‘கடந்த காலத்தில்’ உள்ள பாசிட்டிவ் காரெக்டர்கள் மட்டுமே இருக்கும்.
நெகட்டிவ் காரெக்டர் ஒன்று கூட இருக்காது.

கலைக்கண்ணோடு... காழ்ப்புணர்சியின்றி... வழக்கு எண்ணைப்பாருங்கள்.
இந்த ஆண்டின் சிறந்த படமாக வழக்கு எண்ணை தேர்ந்தெடுக்க
எந்த தயக்கமும் இருக்காது.

‘வழக்கு எண் தொடரை’ 2013 ல் தொடர உங்கள் வாழ்த்து அவசியம்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

10 comments:

  1. Yes Sir.. You are absolutely correct. I am so proud to be a tamilan as we have world standard film maker Mr.Balaji sakthivel sir..

    ReplyDelete
    Replies
    1. பாலாஜி சக்திவேலை உற்சாகப்படுத்தி இன்னும் தரத்துடன் படமாக்க
      உரம் அளிக்க வேண்டும்.

      நல்ல படம் எடுக்க நமக்கு நாலு பேர்தான் இருக்காங்க.

      வருகைக்கு நன்றி நண்பரே.

      Delete
  2. சூப்பர் போஸ்ட் சார். வழக்கு என் படம் முடிந்த உடன் நான் எழுந்து நின்று கை தட்டினேன்.
    //‘காதல்’ படத்திலேயே கதாநாயகனை கடைசிக்காட்சியில்தான்
    அறிமுகப்படுத்துவார்.//
    எனக்கு, இது கொஞ்சம் புரியவில்ல, யார் அது என்று கொஞ்சம் சொல்ல முடியுமா..??? பைத்தியமான பரத்தை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் கதாநாயகி கணவர் ஆள் தான் கதாநாயகனா..???

    ReplyDelete
    Replies
    1. கதாநாயகியின் கணவர்தான் காதல் படத்தின் கதாநாயகன்.

      வருகைக்கு நன்றி ராஜ்.

      Delete
  3. எனக்கும் இந்த கோபம் இருந்தது. பர்பி திரைப்படத்தை ரசித்தேன் என்றாலும் ஆஸ்கருக்கு அனுப்ப ஒரு தரமான படம் கூட கிடைக்கவில்லையா என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது..

    நல்ல பதிவு..

    ReplyDelete
    Replies
    1. கோபத்தை அடக்கி வைக்கக்கூடாது.
      கொட்டி விட வேண்டும்.
      தார்மீகக்கோபத்தை பதிவாக்குங்கள்.

      நன்றி நண்பரே.

      Delete
  4. ரொம்ப நாளைக்கு பிறகு உங்களுக்கு பின்னூட்டம் போடுறேன். காரணம் எனக்கும் இந்த வருடத்தில் மிகவும் பிடித்த படம் இதுதான். தொழில்நுட்பத்தில் கொஞ்சம் மினக்கெட்டிருந்தால் ஹாலிவுட்டை முழுங்கியிருக்கும். காரணம் பள்ளிமாணவர்கள் எவ்வாறு சீரழிகிறார்களென்று புடம்போட்ட படம் தமிழில் இவ்வாறு வரவில்லை. வழக்கு எண் தொடருக்கு எனது வரவேற்பை இப்பொழுதே வழங்குகிறேன். ஒரு தோழனாக சிறு அறிவுரை. என்னதான் மிகச்சிறந்த படமாக இருந்தாலும் அதை திரும்ப திரும்ப ஆராய்ந்து ஆழ்ந்து அலசுவதில் வாசகனுக்கு சலிப்பு தட்டிவிடும். ஆகவே தேவையானவற்றை தெளிவாக அளவோடு சொன்னால் அதுவும் இந்த படத்துக்கு ஒரு பதிவே போதும். நிச்சயம் வரலாற்றில் இடம்பெறும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆலோசனைக்கு நன்றி நண்பரே.

      ‘வழக்கு எண்ணுக்கு’ சுருக்கமான தொடரில் விளக்கி விடுகிறேன்.

      Delete
  5. இன்னும் பர்பி படத்தை பார்க்கவில்லை..உண்மையாகவே வழக்கு எண் நல்ல தேர்வுதான்...பதிவின் இடையில் குறிப்பிட்ட L' Argent படம் கையில் இருந்தும் பார்க்க தவறிக்கொண்டே போகிறது..அடுத்த வருடம் பார்த்துருவேன்..தொடருங்கள் அண்ணா...
    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. "படம் முழுக்க நிறைய காட்சிகளில் வருபவன்தான் கதாநாயகன் என்பது அல்ல."

    Well said.. waiting for your detailed review.....

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.