நண்பர்களே...செழியன் அவர்கள் இளையராஜா இசையை ஆராய்ந்து எழுதிய கட்டுரையின் நிறைவுப்பகுதியை இப்பதிவில் காண இருக்கிறோம்.
‘பாரதி’ , ‘காசி’ , ‘அழகி’ முதலான படங்களில்,
இளையராஜாவின் பின்னணி இசை குறிப்பிடத்தகுந்ததாக இருந்த போதிலும்,
அது குறித்து, ஒரே ஒரு வரியில் பாராட்டி...
நமது விமர்சனங்கள் முடிந்து போகின்றன.
இது பின்னிருந்து உழைக்கின்ற கலைஞனுக்கு எவ்வளவு ஆற்றாமையையும்,
படைப்புச்சோர்வையும் தரும் !
ஒரு திரைப்படத்தின் பின்னணி இசை ஏன் சிறந்தது ?,
எவ்வாறு காட்சியின் மனவுணர்வோடு ஒத்துப்போகிறது ? அல்லது
காட்சி தரும் உணர்வையும் கடந்த மனநிலையை ஏற்படுத்துகிறது ! என்று,
இசை அறிந்தவர்கள் சொல்வதன் மூலம்,
ஒரு படத்தின் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என்கிற விஷயம்,
ஒரு திரைப்பட மாணவனுக்கு அல்லது ரசிகனுக்கு -
ஏன் ? திரைப்பட இயக்குனருக்கும் தெரியும் அல்லவா !
அது போன்ற தீவிரமான, ஆழமான...
‘திரைப்பட இசை குறித்த விமர்சனங்கள்’ தமிழில் வரவேண்டும்.
புதிதாக இசை கற்கிற மாணவர்கள்,
வாசித்து பழகுவதற்கு,
‘மைக்கேல் ஜாக்சனின்’ பாடல்கள்...
‘இசைக்குறிப்புகளாக’ [ musical notation ] கிடைக்கின்றன.
அயல் நாட்டவரின் புகழ் பெற்ற எந்த இசைப்பாடலும் அச்சிடப்பட்ட ‘இசைக்குறிப்புகளாக’ கிடைக்கின்றன.
இசை, எந்த மொழிக்கும் பொதுவானதால் [ universal language ]
ஒரு இசைக்கலைஞன்,
தனது இசையை குறிப்புகளாக வெளியிடுவதன் மூலம்,
இயற்றப்பட்ட தனது படைப்பின் சூக்குமங்களை,
சாதாரணமானவர்களுக்கும் எடுத்துச்செல்ல முடிகிறது.
இளையராஜாவுக்கு அதற்கான தகுதி இருந்த போதிலும்,
அவரது சிறந்த பாடல்கள், சிறந்த பின்னணி இசை,
Nothing But Wind, How To Name It முதலான இசைக்கோலங்கள் ,
ஆகியவற்றின் மூலமான இசைக்குறிப்புகளை,
ஏற்பாடுகளை [ Arrangements ],
நாம் படித்து பார்ப்பதற்கோ,
வாசித்து பழகுவதற்கோ,
அச்சிடப்பட்ட பிரதி அல்லது கைப்பிரதி எதுவுமே கிடைப்பதில்லை.
இவை வெளி வந்தால்,
உலகெங்கிலும் உள்ள இசை மாணவர்களுக்கு அரிய பரிசாக அமையும்.
உலகளாவிய விமர்சனம்,
ஒரு தமிழ் படைப்பாளிக்கு கிடைக்கிற வாய்ப்பும் ஏற்படும்.
இளையராஜா, தனது பரிசோதனைகளின் மூலம்,
இசையின் பூட்டிய பல கதவுகளை திறந்த போதும்,
அதனுள் பிரவேசிக்கிற அடிப்படை தகுதியற்று,
விழிப்புணர்வற்று இருக்கிறோம்.
வெறுமனே போற்றிக்கொண்டு இருப்பதன் மூலம்,
வெற்றுப்பார்வையாளராக மட்டுமே இருக்கிறோம்.
இசையின் உண்மையான தரிசனங்களை கண்டு கொள்ளாமல் அல்லது
கண்டு பிடிக்க முடியாமல்,
மேலோட்டமாகப்புகழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
இளையராஜா, திரைப்படம் என்கிற வலிமையான ஊடகத்தினுள் இருப்பதால்
தன் சம காலத்தில் அதிக அளவில் புகழப்பட்டிருக்கிறார்.
அதே சமயம், திரைத்துறையில் இருப்பதாலேயே,
இசை விமர்சகர்களாலும்,
இசைப்பண்டிதர்களாலும்,
அதிக அளவு புறக்கணிக்கப்பட்ட கலைஞராகவும் இருக்கிறார்.
உன்னதமான கலைஞன் திரைத்துறையிலிருந்து வர முடியாது என்று எந்த பண்டிதச்சட்டங்களும் சொல்லவில்லை.
‘சார்லி சாப்ளின்தான், திரைப்படத்துறையின் ஒரே மேதை’ என்று பெர்னாட்ஷா சொன்னார். அது அவரது கூற்று.
ஐஸன்ஸ்டைன், தார்கோவ்ஸ்கி, குரோசுவா, ரே என்று மேதைகளின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
மேலும் மேற்சொன்ன கலைஞர்கள் மூன்றாம் தரமான பொழுதுபோக்கு திரைப்படங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டவர்கள் அல்ல.
ஆனால் இந்தியப்பாரம்பரிய இசைக்கும்,
பொழுதுபோக்கான திரை இசைக்கும்,
தனது தீவிரமான படைப்புகளின் வீச்சு மூலம்,
அறியப்படாத சாதனைகளை நிகழ்த்தியிருக்கும்,
இன்றும் நிகழ்த்தும்...
இளையராஜாவின் நிலை முற்றிலும் வித்தியாசமானது.
இவர் ...சினிமாவின் முதல்தரமான கலைஞர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இதே விபத்து நேர்ந்தது.
தமிழ் சினிமாவில் நடித்ததன் மூலம்,
உலக அரங்கில் அதிகம் கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார்.
இவரையும் நாம் வெற்று ஆரவாரத்தோடு,
போற்றிப்புகழ்ந்தோமே தவிர,
இது வரையிலும்,
அவர் நடிப்பு குறித்த உண்மையான விமர்சனத்தை செய்யவில்லை.
உலகிலிருக்கும் தலை சிறந்த நடிகர்களோடு ஒப்பிடுகையில்,
அவர் எந்த வகையில் அவர்களுக்கு இணையானவர் என்கிற ஒப்பீடை தமிழில் இதுவரையிலும் யாரும் செய்யவில்லை.
இவ்வாறான விபத்துக்களை தொடர்ந்து எப்படி அனுமதிக்க முடியும் ?
கவிஞர் கண்ணதாசன் தனது கடைசிக்காலங்களில்,
‘ திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியது குறித்து வருந்துகிறேன்.
எனது புலமையை,
தீவிர இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுத்தாமல் வீணடித்து விட்டேன்’ என்று வருந்தினார்.
இவரைப்பற்றி கவிஞர் அப்துல் ரகுமான்,
‘மீன்கள் விற்கும் சந்தையில், விண்மீன்கள் விற்றவர்’ என்று எழுதினார்.
இது இளையராஜாவுக்கும் பொருந்தும்.
தமிழ் சினிமாவின் ஒப்பனை முகங்களுக்கு பின்னால்,
ஒரு அசலான கலைஞனின் படைப்பு கவனிக்கப்படாமல் போவது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது !
ஒரு கலைஞனின் ஆயுட்காலத்திற்கு பின்,
அவனது படைப்புகளை ஆய்வு செய்வதை விடவும்,
அவ்வாறான ஆய்வுகள் அவனது காலத்திலேயே நிகழ்த்தப்படுவது,
அவன் திசைகள் கடந்து...
தனது படைப்பின் எல்லைகளை,
மேலும் விஸ்தரித்து செல்கின்ற வீச்சினை,
அவனுக்குத்தரும்.
நமது மேலோட்டமான அணுகு முறையையும்,
‘தமிழ் சினிமா இசைதானே’ என்கிற அலட்சியத்தையும் விடுத்து,
ஆழமான ஆய்வு ஒன்றே,
இளையராஜா என்கிற கலைஞனின் மறைக்கப்பட்ட முகங்களை,
உலகிற்கு அறிமுகப்படுத்த முடியும்.
நமது பாழ் வெளியில்,
தனது படைப்பின் விதைகளை,
தீராது விதைக்கிற கலைஞனுக்கு,
அவ்வாறான ஒரு சில துளிர்ப்புகள்தான்...
உண்மையான படைப்பூக்கமாக இருக்கும்.
தன் படைப்புகள் பற்றி அவர் நினைவு கூர்கையில்,
இது மாதிரியான அசலான அங்கீகாரங்கள்தான்,
பிராந்திய மொழியின் இசையமைப்பாளராக இருந்ததும்,
தமிழனாகப்பிறந்ததும்,
பெருமைக்குறியதாக...அவரால் உணரப்படும்.
2002 ஜூன் கணையாழி இதழில் செழியன் எழுதியது.
செழியன் அவர்களுக்கு நன்றி.
நண்பர்களே...
செழியன் அவர்கள், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எழுப்பிய குரல்,
இன்றும் கவனிப்பாரற்று தேய்ந்து கிடக்கிறது.
இந்த அவலத்தை இன்னும் தொடரப்போகிறோமோ ?
சிந்திப்போம்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
செழியன் அவர்களின் சிந்தனை உண்மை... இன்னும் தொடர்வதும்...
ReplyDeleteசெழியனின் விருப்பம்தான் நமது விருப்பமும்.
Deleteநிறைவேறுவது காலத்தின் கைகளில்.
100/ வீதம் நிஜம் அவரின் கேள்விக்கு பதில் வரட்டும்.
ReplyDeleteநண்பரே...
Deleteஒரே நாளில் இளையராஜா பற்றிய பதிவுகள் அனைத்திற்கும்,
பின்னூட்டமிட்டு அசத்தி விட்டீர்கள்.
தங்களுக்கு ஒட்டு மொத்தமாக இங்கே நன்றி சொல்லுவதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
நன்றி.
உண்மையில் நான் இப்போது செழியன் அவர்களை பார்த்தால் காலில் விழுந்து விடுவேன் அவருடைய எழுத்து என்னை அவ்வளவு உணர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது நன்றி
ReplyDelete