Jul 23, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை...குற்றவாளியாக்கிய காவியம்-5 Final Part


கமினோவை ஐந்து பதிவுகளில் முடிப்பது சவாலாகவே இருந்தது.

‘குருவி’ ரசிகர்களுக்கும் புரியும்...எளிதான குறியீடுகளைப்பற்றி விளக்குவதை விலக்கி...
நிறைய காட்சிகளை, கோடார்டு பாணியில்  ‘ஜம்ப் கட்’ எடிட் செய்து...
 முடிக்க முயல்கிறேன்.

கமினோ படத்தை, கவியரசர் கண்ணதாசன் பாடலோடு ஒப்பீடு செய்யும் போது இப்பதிவு புதிய பரிமாணம் பெறுகிறது.
சாந்தி நிலையம் [1969 \ தமிழ்] என்ற  படத்தில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையில் இடம் பெற்ற பாடல் இது.

கடவுள் ஒரு நாள், உலகை காண... தனியே வந்தாராம்.
கண்ணில் கண்ட மனிதரையெல்லாம், நலமா? என்றாராம்.

ஒரு மனிதன், வாழ்வே இனிமை என்றான்.
ஒரு மனிதன், அதுவே கொடுமை என்றான்.
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்.

கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது.
காசும்,பணமும், ஆசையும்... இங்கே யார் தந்தது?
எல்லையில்லா நீரும் நிலமும் நான் தந்தது.
இன்பம்,துன்பம்...என்னும் எண்ணம் ஏன் வந்தது?

இறைவனுக்கே இது புரியவில்லை.
மனிதனின் கொள்கை தெரியவில்லை.

பள்ளிக்கூடம் செல்லும் வழியில், கடவுள் நின்றாராம்.
பச்சை பிள்ளை, மழலை மொழியில்... தன்னை கண்டாராம்.
உள்ளம் எங்கும், செல்வம் பொங்கும் அன்பை தந்தாராம்.
உண்மை கண்டேன்...போதும் என்று வானம் சென்றாராம்.

பாடலை முழுமையாக கேட்க...
http://oldtamilmp3.blogspot.in/2009/09/shanthi-nilayam-1969.html

கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் கொண்ட  ‘சிண்ட்ரெல்லா’ கருத்தாக்கம்... கமினோ படம் நெடுகிலும் இழையோடுவதை காணலாம்.
கண்ணதாசன் பாடலின் தத்துவத்திற்கு, நேர் முரணாக... மதவாதிகள் இயங்குவதையும் காண முடியும்.

கமினோவின் விருப்பமான  ‘வியன்னா’ குழப்பமடைய வைத்தாலும்,
ஏனையவற்றை நிறைவேற்ற எண்ணுகிறார் கமினோவின் தந்தை.
சூப்பர் 8எம்.எம். கேமராவில் கமினோவை படம் பிடிக்கிறார்.
அவள் விரும்பிய  ‘அறிவியல்  புனைவு’கதை நூலை வாங்கி படித்து காட்டுகிறார்.
இக்கதையின் நாயகர்  ‘மிஸ்டர் மீபல்ஸ்’ கமீனோவின் கற்பனை காட்சிகளிலும் இடம் பெறுவார்.
 ‘மீபல்ஸின்’ தோற்றம்  ‘அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டினின்’ மினியேச்சர் போல் அமைத்திருப்பதும் குறியீடே.
ஐன்ஸ்டைன், “ Imagination is greater than knowledge ” என அறிவியலை கடந்து அழகியலுக்குள் பிரவேசித்தவர்.


கமினோவின் விருப்பமான ‘சிவப்பு வண்ண ஆடையை’ ...
சொந்த ஊரான மாட்ரிட் நகருக்கு போய் வாங்க...காரில் விரைகிறார்.
கடையில் ஷோ கேஸில்...
கமினோவுக்காகவே காத்திருந்த ‘சிவப்பு வண்ண ஆடையை’ வாங்குகிறார்.
சூப்பர் 8 எம்.எம். பிலிம் ரோலை டெவலப்பிற்கு கொடுக்கிறார்.
மகளுக்கு பிடித்தமான கேக் வாங்க...பேக்கரிக்கு செல்கிறார்.
ஜீசஸ்சும் அங்கே இருக்கிறான்.
கமினோவை விசாரிக்கிறான்.
இவர், அவர்களது  ‘சிண்ட்ரெல்லா’ நாடகம் பற்றி விசாரிக்கிறார்.
கேக் வாங்கி,விடை பெறுகிறார்.
“குட் பை ஜீசஸ்”
வெளியே வந்ததும் கடை போர்டை பார்க்கிறார்.
                                    வியன்னா பேக்கரி
எல்லா திரைகளும் விலகி...தெளிவாகிறது.
மீண்டும் உள்ளே சென்று,
 “கமினோவுக்கு தர, உன்னிடம் கடிதம் இருக்கிறதா?:”

கமினோவின் அன்பிற்குறியவனை கண்டு கொண்ட ஆனந்தத்தில் காரில் விரைகிறார்.
பக்கத்து இருக்கையில்  ‘காதலின் சின்னம்’ வரையப்பட்ட கடிதம் இருக்கிறது.
கடிதத்தை பெருமிதத்துடன் பார்க்கிறார்.
                                                        டமார்
கண நேர கவனச்சிதறல்...ராட்சத லாரியில் மோதி  நொறுங்க போதுமானதாக இருந்தது.

கமினோவின் மரணத்தை நோக்கி நகர்ந்த திரைக்கதை, எதிர்பாராத திருப்பமாக
தந்தையின் மரணத்தை காட்டுகிறது.
கமினோவால் ஏற்பட்ட டிராஜிடி...இப்போது பன்மடங்கு பெருகி...கருணையில்லாமல் தாக்குகிறது.
ஹிரோஷிமா,நாகசாகி போல் நொறுங்கிப்போகிறோம்.

கமினோ, தோழி அனுப்பிய கவரை பிரித்து காட்டுமாறு தாயிடம் வேண்டுகிறாள்.
 ‘ஜீசஸ் லவ்ஸ் யூ’ என அச்சிடப்பட்ட  ஜீசஸ் படத்தை  ‘குறியீடாக’ அனுப்பியிருக்கிறாள் தோழி.
கமினோவிடம் காட்டுகிறார் தாயார்.

 “தயவுசெய்து என்னிடம் காட்டுங்கள் அம்மா”
கமினோவின் கண்களில்... உயிர் போய் விட்டது தெரிய வருகிறது.
போன் வருகிறது.
கணவன் உயிர் போய் விட்டது தெரிய வருகிறது.
குலுங்கி அழுகிறார்.
யதார்த்த மனுஷியாக பரிணாமம் பெற... இப்படியா  ‘இடுக்கண்’ வர வேண்டும்?
கணவனின் இறுதி சடங்கில் கூட இறுக்கமாகவே இருக்கிறார்.
பாதிரியார்கள் வழக்கம் போல,கமினோவின் தந்தை மரணத்திற்கு...
கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறார்கள்.

கமினோவை வழியனுப்ப பாதிரியார்கள்,டாக்டர்கள்,நர்ஸ்கள் என அனைவரும் திரண்டு விட்டனர்.
ஹாஸ்டலிலிருந்து நூரியையும் அனுப்பி வைக்கிறார்கள்.
இருக்கைகள் காலியாக இருக்க,
நூரி பஸ்ஸில்  நின்று கொண்டே பயணிப்பது...குறியீடு.

கமினோவின் ஊரான மாட்ரிட் நகரில், அவளது நண்பர்கள் நடிக்கும்  ‘சிண்ட்ரெல்லா’ நாடகம் நடைபெறுகிறது.
நாடகம் நடக்கும் இடத்தில், ஆத்ம ரீதியில் கமினோ சஞ்சரிப்பது...டயலாக் மூலம் உணர்த்தப்படுகிறது.
டாக்டர்கள் ஆக்சிஜன் செலுத்தப்படுவதை நிறுத்துகிறார்கள்.
கமினோ தனது கற்பனை உலகத்தில் பிரவேசிக்கிறாள்.

தான் விரும்பிய  ‘சிகப்பு ஆடை’ அணிந்திருக்கிறாள்.
ஜீஸசுடன் நடனம் ஆடுகிறாள்.
முத்தம் கொடுக்கிறாள்.

மரணப்படுக்கையில் படுத்திருக்கும் கமினோ முத்தம் கொடுப்பது போல் உதட்டை குவிக்கிறாள்.
தந்தை வருகிறார்.
 “அப்பா...”
தந்தையை கட்டி பிடிக்கிறாள்.
சிட்டுக்குருவிகள் கூட்டம் பறந்து... இருவரையும் கடக்கின்றன.


சிட்டுக்குருவிகள் பறப்பதை ஜன்னல் வழியாக பாதிரியார் பார்க்கிறார்.
கமினோவின் கண்கள் திறந்திருக்க,
இதழ்களில் நிரந்தர புன்னகையை விட்டு விட்டு...
ஆன்மா பறந்து விடுகிறது.

 ‘எதற்காகவோ’ பாதிரியார், வெறி பிடித்தவர் போல கை தட்ட...
டாக்டர்கள்,நர்ஸ்கள்,ஏனைய மத குருமார்கள் அனைவரும் கை தட்டலில் சேர்ந்து கொள்கிறார்கள்.
இது Faith.
ஒருங்கிணைந்த கை தட்டல்கள்... அபஸ்வரமாய் ஒலிக்கிறது.

கமினோவின் தாயும்,அக்காவும் மட்டுமே கதறியழுகிறார்கள்.
இது Human Sensuousness.

 ‘கனேனைஷேசன்’பிராஸசில், இறுதிப்பகுதியாக இறந்தவர்களை புகைப்படம் எடுப்பது வழக்கம்.
பாதிரியார் கமினோவை புகைப்படம் எடுக்கலாம் என தெரிவிக்கிறார்.
அதற்கு தாயார் எந்த சம்மதமும் தெரிவிக்காமல், கமினோவின் உடலை... மார்போடு கட்டித்தழுவி பாதுகாக்கிறார்.
அவர் மதவாத நம்பிக்கைகளுக்கு எதிராக, திரும்பி விட்டதன் குறியிடுதான் இக்காட்சி.

கமினோவில் கற்பனைக்காட்சியில் இடம் பெற்ற குறியீடுதான்...
கீழே உள்ள புகைப்படம்.
இதற்கான விளக்கத்தை முதல் பதிவில் சொல்லவில்லை.
இப்போது சொல்ல தேவையில்லை.

கமினோவின் இறுதிச்சடங்கு முடிந்த பின் வரும் காட்சிகள் அனைத்தும் குறியீடுகளாக காட்சியளிக்கிறது.

கமினோ கொடுத்த  ‘மிஸ்டர் மீபல்ஸ்’ கதைப்புத்தகத்தை ‘உபயோகமற்றவை’ என்ற கூடையில் போடாமல்...
ஷெல்பில் அடுக்கி வைக்கப்பட்ட நூல்கள் வரிசையில்....
 ‘கமினோ’ என்ற நூலுக்கு அருகில் வைத்து விட்டு குலுங்கி அழுகிறாள் நூரி.

கணவர் சூப்பர் 8 எம்.எம்மில்எடுத்த,
கமினோ ஆடிப்பாடும் காட்சிகள்...
பிறந்த நாள் கொண்டாட்டங்கள்...
என கடந்த காலத்தின் தருணங்களை திரையில் பார்க்கிறார் தாயார்.

இனி, ' போலி ' மத நம்பிக்கைகளை விடுத்து...
யதார்த்த உலகில் பிரவேசிப்பார்கள் என்ற நம்பிகையை இக்குறியீடுகள் தருகின்றன.

கமினோ என்றால், ஸ்பானிஷ் மொழியில்... பாதை என்று அர்த்தம்.
பிறப்புக்கும், இறப்புக்கும் நடுவில் உள்ள வாழ்க்கை போராட்டத்தை கடக்க எந்த பாதையை தேர்ந்தெடுப்பது  என்பதை காட்டியிருக்கிறார் இயக்குனர்.
அதே வேளையில் மதவாதிகள் உச்சந்தலையில் ஆணியடித்து ஆசனவாய் வரைக்கும் இறக்கியிருக்கிறார்.

                            'Aesthetics Replaces Faith'
‘மாபெரும் இயக்குனர் பெர்க்மன்’ மத நம்பிக்கைகளுக்கு மாற்றாக கலை இயங்கும் என நம்பினார்.
இக்கருத்தையே தனது படங்களின் பரப்புரையாக வைத்தார்.
கமினோ இயக்குனர் அதை... வழி மொழிந்திருக்கிறார்.

அரசியல் மாமேதை லெனின்,
 “ மனித இனம் தனக்குதானே தன்னம்பிக்கை கொள்ளும் வரை...
மத நம்பிக்கைகள் ஊன்று கோலாக இருந்து விட்டு, போகும்...”
என்ற கருத்தை சொன்னார்.

கமினோ,அவளது தந்தையும் மனித நேயம்,கலை,அறிவியல் என்ற அழகியலில் வாழ்ந்து மறைந்தார்கள்.
கமினோவின் தாயும்,அக்காவும் மதி மயக்கும் மத நம்பிக்கைகளிலிருந்து மீண்டு...தங்கள் மீது நம்பிக்கை கொண்டு அழகியலில் வாழ ஆரம்பித்து விட்டார்கள்.

மற்றவர்கள் எப்போது ஆரம்பிப்பார்கள்?

12 comments:

  1. விமர்சனம்...படம் பார்க்க தூண்டுகிறது...

    ReplyDelete
    Replies
    1. ஜீவா...இந்த டெம்ப்ளட் கமெண்டின் குறியீடு...
      உள் குத்தா?

      Delete
  2. அருமை.. அருமையான விமர்சனம்.. இவற்றை நீங்கள் ஒரு புத்தகமாக வெளியிடலாமே.

    ReplyDelete
    Replies
    1. கமினோ பற்றி எழுத வேண்டிய விஷயங்கள் இன்னும் இரண்டுமடங்கு உள்ளது.
      அவற்றையெல்லாம் எழுதினால்... புத்தகமாக போடலாம்.

      பாராட்டுக்கும்...ஊக்கத்துக்கும்...நன்றி.

      Delete
  3. உலக சினிமாவிற்கு கண்டிப்பாக தரமான ஒரு பார்வை அனுபவ அழகான விமர்சனம்..

    ReplyDelete
    Replies
    1. கமினோ பதிவுகளுக்கு தொடர் பாராட்டு நல்கிய நண்பரே!
      நன்றி.

      Delete
  4. //மற்றவர்கள் எப்போது ஆரம்பிப்பார்கள்?//

    நான் முதல்ல இந்த படத்தைப் பார்க்க ஆரம்பிக்கனும்.. வெள்ளிக்கிழமை பார்த்துவிட்டு வந்து சொல்றேன் நண்பா!

    (நல்ல வேளை இந்தப் பதிவை வாசித்துக் கொண்டதால் அப்பாவும் இறந்துவிடுவார் என்று முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடிகிறது.. ஒரு இதய வெடிப்பையாவது குறைத்துக் கொள்ளலாம் போல..)

    ReplyDelete
    Replies
    1. கமினோ தொடராக எழுத முடிந்ததற்கு, தங்களைப்போன்ற
      நல் உள்ளங்களின் தொடர் ஆதரவே.
      நன்றி...நண்பா.

      Delete
  5. கடந்த இரண்டு பதிவையும் ஒன்றாக படித்தேன். நீங்கள் படம் பார்த்து கலங்கிய உணர்வை, blog post எழுதி எங்களுக்கும் வழங்கி விட்டீர்கள். உங்கள் உணர்ச்சிகளை மிக அழகாக வார்த்தைகளில் கொண்டு வருகிறீர்கள். மேலும், past tense-இல் எழுதாமல் present tense -இல் எழுதுவதால், காட்சிகள் இப்பொழுது கண் முன்னே நடப்பது போல் ஒரு தோற்றம், படத்தின் பாதிப்பை மேலும் அதிகரிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நான் எழுதுவதை...நீங்கள் ஆய்வு செய்து கணித்திருப்பதை மிகவும் ரசித்தேன்.

      நன்றி நண்பரே!

      Delete
  6. அழகிய விமர்சனம் மாப்ளே...

    ReplyDelete
    Replies
    1. அழகிய பாராட்டு மாப்ள...நன்றி.

      Delete

Note: Only a member of this blog may post a comment.