நண்பர்களே...
1978ம் வருட தீபாவளி அன்று,
கமல் நடித்த மூன்று படங்கள் வெளியாகியது.
1 சிகப்பு ரோஜாக்கள் - இயக்கம் : பாரதிராஜா
2 மனிதரில் இத்தனை நிறங்களா - இயக்கம் : ஆர்.சி. சக்தி
3 அவள் அப்படித்தான் - இயக்கம் : ருத்ரையா
ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியானாலும்,
காலத்தை வென்றது ‘அவள் அப்படித்தான்’ மட்டுமே!
கதைக்கான மூலக்கருவை ருத்ரையா உருவாக்க,
திரைக்கதையாக்கத்தில் இயக்குனர் கே.ராஜேஷ்வர் பணியாற்ற,
வசனத்தை அனந்து அவர்களும், எழுத்தாளர் வண்ண நிலவனும் சேர்ந்து
எழுதி இருக்கிறார்கள்.
மேலும், இப்படத்தில் அர்ப்பணிப்போடு உழைத்த...
பல நல்ல கலைஞர்களை இப்பதிவில் அடையாளம் காணலாம்.
‘அவள் அப்படித்தான்’ படத்தை இயக்கிய ருத்ரையா,
இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
அப்போதே கமலிடம் நட்பாக இருந்த காரணத்தால்,
அவரிடம் எளிதாக கால்ஷீட் வாங்கி விட்டார்.
கமல்தான் அன்று தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரம்.
தனது ‘பிஸி ஷெட்யூலில்’...கிடைத்த நேரத்தை,
‘அவள் அப்படித்தானுக்கு’ ஒதுக்கி கொடுத்து...
படத்தை முடிக்க உதவி இருக்கிறார்.
படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு ஸ்ரீப்ரியாவிடம் கமலே பேசி,
அனுமதி வாங்கி கொடுத்திருக்கிறார்.
ஸ்ரீப்ரியாதான் அன்று முன்னணி நட்சத்திரம்.
அவர் நடித்த ஆட்டுக்கார அலமேலு வெள்ளிவிழா கொண்டாடிய நேரம்.
அவர் அப்போது ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார்.
‘அவள் அப்படித்தான்’ படத்திற்கு வெறும் முப்பதாயிரம் ரூபாய் மட்டும் சம்பளமாக பெற்றிருக்கிறார்.
சூட்டிங் முதல் நாள் அன்று,
அன்றைய கால வழக்கப்படி தனது வீட்டிலிருந்து சேர் கொண்டு வந்திருக்கிறார் ஸ்ரீப்ரியா.
ஆனால் கமல்,ரஜினி உட்பட யாருக்குமே சேர் கிடையாது.
சூழலைப்புரிந்து கொண்டு அடுத்த நாள் முதல் சேர் கொண்டு வராமல் எல்லோரையும் போல் தரையில் அமர்ந்து பணியாற்றியிருக்கிறார்.
சாதாரண மெஸ்ஸில் இருந்து கொண்டு வரப்பட்ட,
சுமாரான சாப்பாடையே அனைவரும் சாப்பிட்டு இருக்கிறார்கள்.
கமலும்,ஸ்ரீப்ரியாவும் சூட்டிங், டப்பிங் அனைத்திலும் ரீடேக் போகாமல்,
ஒரே டேக்கில் முடித்துக்கொடுத்து பங்காற்றி இருக்கிறார்கள்.
ரஜினியும் அப்போது வளர்ந்து வரும் கலைஞராக இருந்தாலும் அவரும் பிஸியான நடிகர்தான்.
இயக்குனர் கே. பாலச்சந்தரின் வலது கரமும்,
கமலின் ஆசானுமான அனந்து அவர்கள்,
ரஜினியிடம் பேசி கால்ஷீட் வாங்கி கொடுத்திருக்கிறார்.
அந்தக்காலத்தில் இசையமைப்பாளர்தான்,
தயாரிப்பு அலுவலகத்துக்கு வரவேண்டும்.
இசையமைப்பாளர் இளையாராஜா அலுவலகத்துக்கு வருகிறார் என்பதற்காக அவசரம் அவசரமாக பேன் வாங்கி மாட்டி இருக்கிறார்கள்.
அது வரை படத்தயாரிப்பு அலுவலகத்தில் பேன் கூட கிடையாது.
ஆனால் அவர் வரும் நேரம் கரண்ட் இல்லை.
அந்த புழுக்கத்திலேதான்,
இன்றும் குளிர்ச்சியையும் இனிமையையும் தரும் டியூனை உருவாக்கி இருக்கிறார்.
இசைக்கருவிகளில்... பியானோதான் இளையாராஜாவுக்கு ‘பெட்’.
அவர் பியானோ இசையில் போட்ட ‘மாஸ்டர் பீஸ்களில் ஒன்று’ ...
‘உறவுகள் தொடர் கதை’ என்ற பாடலும் ஆகும்.
[ மற்றொன்று ‘ஹேராம்’ படப்பாடலான ‘நீ பார்த்த பார்வை’]
இப்பாடலில், இளையராஜாவின் இசையில் ‘மோனாலிஸா’ தன்மையை உணரலாம்.
கதையின் மையக்கருத்து,
ஆண்களால் பெண்ணுக்கு இழைக்கப்படும் துரோகங்கள்.
அந்த கருத்தாக்கம் , இப்பாடலில் மெல்லிய இழையாக நெய்யப்பட்டிருக்கும்.
கமல்- ரஜினி - ஸ்ரீப்ரியா - இளையாஜா கூட்டணியில் வந்த
‘இளமை ஊஞ்சலாடுகிறது'.... மெகா ஹிட் திரைப்படம்.
எனவே இப்படம் எளிதில் வியாபாரம் ஆகி விட்டது.
படம் வெளியான போது,
‘இளமை ஊஞ்சலாடுகிறது’ போன்ற படத்தை எதிர் பார்த்து சென்ற
பாமர ரசிகர்கள் தியேட்டரில் கத்தி கலாட்டா செய்திருக்கிறார்கள்.
படம் வெளியான நேரம்,
திரைப்பட மேதை மிருணாள் சென் சென்னைக்கு வந்திருக்கிறார்.
தற்செயலாக தியேட்டரில் ‘அவள் அப்படித்தான்’ படம் பார்த்திருக்கிறார்.
ஒரு கலைத்திரைப்படம் இப்படி புறக்கணிக்கப்பட்டு கிடப்பதைக்கண்டு
மனம் வெதும்பி பத்திரிக்கையாளர்களை வரவழைத்து,
தனது மனக்குமுறலை வெடித்திருக்கிறார்.
‘நல்லதோர் வீணையை புழுதியில் கிடத்தியதை’ சாடி அவர் கொடுத்த பேட்டி பத்திரிக்கைகளில் வெளியானது.
பத்திரிக்கைகள் தொடர்ந்து கமல்,ரஜினி,ஸ்ரீப்ரியா,ருத்ரையாவிடம் பேட்டி வாங்கி வெளியிட்டு கலை ரசிகர்களிடம் படத்தை கொண்டு சேர்த்தன.
படம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் நூறு நாட்கள் ஓடியது.
ஒளிப்பதிவு மேதை ‘மார்க்கஸ் பார்ட்லே’ ,
அந்த வருடத்திற்கான சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை
‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தை தேர்வு செய்து அறிவித்து விட்டார்.
காரணம் வண்ணப்படங்களுக்கு மட்டும்தான்,
அப்போது விருது வழங்கி வந்தார்கள்.
எனவே ‘அவள் அப்படித்தான்’ ,
மார்க்கஸ் பார்ட்லே பார்வைக்கே வரவில்லை.
ஆனால் ‘சிறந்த படத்திற்கான’ தேர்வுப்பட்டியலில் இருந்த படங்களை திரையிட்ட போது,
‘அவள் அப்படித்தானை’ பார்த்து இருக்கிறார் மார்க்கஸ் பார்ட்லே.
படத்தின் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருப்பதை கண்டு,
இப்படத்திற்கும் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது வழங்கப்பட வேண்டும்
என அடம் பிடித்திருக்கிறார்.
எனவே முதன் முறையாக ‘கருப்பு - வெள்ளை’ படத்திற்காக
தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டது.
அதன்படி, ‘அவள் அப்படித்தான்’ ஒளிப்பதிவாளர் நல்லுசாமிக்கு
விருது வழங்கப்பட்டது.
சிறந்த படமாக ‘அவள் அப்படித்தான்’ படத்தை,
தேர்வு செய்து விருது வழங்கினார்கள்.
அவள் அப்படித்தான் = நல்ல கலைஞர்களின் கூட்டு முயற்சி.
இப்பதிவில் இடம் பெற்ற தகவல்கள்,
ஒளிப்பதிவாளர் திரு.நல்லுசாமி பேட்டியாக,
அந்திமழை இதழில் வெளி வந்தவை.
அனைத்திற்கும் நன்றி.
மேலும் விரிவான தகவல் பெற கீழ்க்கண்ட இணைப்பிற்கு செல்லவும்.
http://andhimazhai.com/news/view/nallusamy-12-4-2013.html
இளையராஜாவின் பாடலை நல்லுசாமியும் ருத்ரையாவும் சேர்ந்து காவியமாக்கியதை காணொளியில் காண்க.
CNN - IBN டெலிவிஷன் நிறுவனம் இப்படத்தை இந்தியாவின் தலை சிறந்த நூறு படங்களில் ஒன்றாக தேர்வு செய்து பெருமை சேர்த்துள்ளது.
இப்படம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பிடியாவை அணுகவும்.
http://en.wikipedia.org/wiki/Aval_Appadithan
இன்று முன்னணியில் இருக்கும் கலைஞர்கள் ஏன் இது போன்ற கலை படைப்புகள் வர உதவுவது இல்லை ?
காசு...பணம்...துட்டு...money...money... என்பதில் மட்டும் குறியா ??
சிந்திப்போம்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
எனது அவள் அப்படித்தான் திரைப்பட ஞாபகங்கள் இங்கே.
ReplyDeleteஅவள் அப்படித்தான் திரைப்பட ஞாபகங்கள்
தகவலுடன் இணைப்பும் தந்தமைக்கு நன்றி.
Deleteபடித்து விடுகிறேன்.
எப்போது பார்த்தாலும் ரசிக்க வைக்கும் படம்... சுட்டிகளுக்கு நன்றி...
ReplyDeleteகாசு...பணம்...துட்டு...money...money... - வேறென்ன...?
ச(சி)ந்திப்போம்.... நன்றி...
காசு பணத்துக்கு எல்லோரும் அலைபவர்கள்தான்.
Deleteஇருந்தாலும், அந்தக்காலத்தில் கலைக்காகவும் தங்களது நேரத்தை ஒதுக்கி இருக்கிறார்கள்.
வணிக நோக்கில் விலை போவதையே இன்றைய கலைஞர்கள் குறிக்கோளாக்கி வாழ்கிறார்கள்...என்ற கருத்தைத்தானே
நீங்கள் சொல்ல வந்தது தனபாலன் சார்.
திரைப்பட செய்திகளுக்கு அப்பாற்பட்ட நீங்க தரும் விசயங்களுக்காவே ஒரு சபாஷ்
ReplyDeleteநண்பர் ஜோதிஜி அவர்களுக்கு நன்றி.
Delete