Apr 8, 2013

சென்னையில் ஒரு நாளில் தரிசிக்கும் மாந்தர்கள்.


நண்பர்களே...
'சென்னையில் ஒரு நாளின்' மூலமான  'டிராபிக்கையும்' பார்த்து விட்டேன்.
இரண்டில் எது நன்றாக இருக்கிறது என்ற கேள்விக்கு,
விஸ்வரூத்தில் கமல் சொல்லும் பதில்தான்...
“ தாஃபிக் நல்ல பெயர்தான்.
ஆனால் என் பெயர் நாசர் ”



விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞனது காதலி மலையாளத்தில்,  விவாக ரத்து  பெறும் நாயகி.
தமிழில் அக்கதாபாத்திரம் ‘ஸ்பெஷல் குழந்தைகளுக்கான’ ஆசிரியையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவேதான் அவள் உணர்வுரீதியாக முடிவெடுக்காமல்,
அறிவுரீதியாக முடிவெடுக்கும் திறனோடு இருப்பது மிகப்பொருத்தமாக இருக்கிறது.
தனது காதலன் இதயத்தை தானமாக்கி, சரித்திரத்தில் அவனது பெயரை நிரந்தரமாக்க செயலாற்றுகிறாள்.
உணர்ச்சி கொந்தளிப்பிலிருக்கும் காதலனின் பெற்றோரை,
அறிவார்ந்த நிலைக்கு மாற்றி செயல்பட வைக்கிறாள்.

மகனை இழந்த பெற்றோர் தனது மகனின் காதலியிடம்,
‘வீட்டிற்கு வர முடியுமா ?’ என அழைக்கின்றனர்.
அவளும் அழைப்பை ஏற்று வருவதாக ஒப்புக்கொள்வாள்.
அந்த போன் கால் வரும் போது அவள் காலியான வகுப்பறையில் தனிமையில் இருக்கும் ஒரு ஷாட்டை கவித்துவமாக அமைத்திருப்பார் இயக்குனர்.

இக்காட்சி  ‘த சன்’ஸ் ரூம்’ என்ற இத்தாலிய உலகசினிமாவை நினைவு படுத்தியது.
விபத்தில் மகனை பறி கொடுத்து துன்பத்தில் ஆழ்ந்திருப்பார்கள் பெற்றோர்.
மகனின் காதலி அவர்களை துன்பக்கடலிலிருந்து மீட்டெடுப்பாள்.
இப்படத்தை நான் பார்த்து பத்தாண்டுகள் ஆகியும் சில காட்சிகள் கோட்டோவியம் போல் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.
நண்பர்கள் இப்படத்தை தவறாமல் பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன்.

THE SON'S ROOM \ 2001 \ ITALY \ DIRECTED BY NANNI MORETTI


லஞ்சம் வாங்கி பிடிபட்டு சஸ்பெண்டாகி இருக்கும் டிராபிக் கான்ஸ்டபிள் காரெக்டரும் தமிழில் நன்றாக செதுக்கப்பட்டு உள்ளது.
அக்கதாபாத்திரம் குற்ற உணர்வில் தவிப்பது தமிழில் மிகவும் இயற்கையாக இருக்கிறது.


‘சஸ்பெண்ட் கான்ஸ்டபிளுக்கு’ பரிந்துரை செய்யும் அரசியல்வாதியாக தமிழில் பாலாசிங் நடித்துள்ளார்.
அவர் எந்தக்கட்சி என கண்டுபிடிப்பவர்களுக்கு,
 ஹாட் சீட்டில் உட்கார வைக்காமலேயே...
‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியை’ கொடுத்து விடலாம்.

மலையாளத்தில் அரசியல்வாதி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராக அப்பட்டமாக காட்டி உள்ளனர்.
தமிழ் படத்தில் துக்கடாக்கட்சியை கூட,  காட்ட முடியாத நெருக்கடி இருக்கிறது.

[ பிரகாஷ்ராஜின்  ‘கௌரவம்’ படத்திற்கு எதிராக ,
அனைத்து உயர் ஜாதிக்கட்சிகளும் கச்சை கட்டி  தயாராக இருக்கிறது.
ஏனென்றால்  ‘கௌரவம்’, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருக்கிறதாம்.
ஹிட்லர் காலத்தை விட மிகக்கொடுமையான நெருக்கடியை
தமிழ்த்திரை உலகம் சந்தித்து வருகிறது.]


 லஞ்சம் வாங்கிய சகோதரனோடு பயணிக்க மறுத்து ஒதுங்கும் சகோதரி கதாபாத்திரம் உயர்வானது.
ஆனால், தனது கணவன் தினமும் கை நீட்டும் லஞ்சவாதி அல்ல;
சூழ்நிலை காரணமாக தவறிழைத்த தங்கம் என ,
அவனோடு இரு சக்கர வாகனத்தில் ஒன்றாக பயணிக்கும் மனைவி கதாபாத்திரம் மிக மிக உயர்வானது.

படத்தில் இரண்டு விபத்து நடைபெறுகிறது.
ஒன்று, சூழ்நிலை காரணமாக அறியாமல் நடக்கும் விபத்து.
இரண்டாவது, துரோகங்களை சகிக்க முடியாமல் மனைவியை கொல்ல முயற்சிக்கும் விபத்து.
இரண்டாவது விபத்து நடைபெறும் போது தியேட்டரே கைதட்டி ஆரவாரிக்கிறது.
“ சபாஷ்...சரியான தீர்ப்பு ” என்ற வாசகம் கைதட்டலில் வெளிப்படுகிறது.


தன்னை மட்டுமே நேசிக்கும் ஒரு நடிகனும்,
பிறரை நேசிக்க கற்றுக்கொடுக்கும் ஒரு நடிகனும்...
முக்கிய கதாபாத்திரங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த முரணில்தான் நாம் கொண்டாடும் நடிகர்கள் இயங்கி வருகிறார்கள் என்பதை தோலுரித்து காட்டி உள்ளார் இயக்குனர்.

நண்பனின் இதயத்தோடு பயணிக்கும்  ‘இஸ்லாமிய இளைஞன்’,
வழியில் இறங்கி தடைகளை அகற்ற உதவுகிறான்.
வந்த பணி செவ்வனே நிறைவேறியதும்,
புகழ் வெளிச்சம் தேடாமல்...
வந்த சுவடு தெரியாமல் சென்னைக்கு திரும்பும் இந்த லட்சிய இளைஞனிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.


ஒரு மந்திரச்சொல்லை பிரயோகித்து கடமை உணர்வு மிக்க கமிஷனரை
இயங்க வைத்த மருத்துவரும்,
அதே மந்திரச்சொல்லை பிரயோகித்து தனது காவல்துறையை செயல்பட வைத்த போலிஸ் கமிஷனரும் வணங்கத்தகுந்த கதாபாத்திரங்கள்.

இத்தனை நிகழ்வுகளுக்கும் காரணகர்த்தர்கள்,
காரோட்டும் பெண்ணை கலாய்க்கும்  ‘இருசக்கர வாகன காவாலிகள்’.
வலையுலகத்திலும் இது போன்ற  ‘காவாலிகளை’ காண முடியும்.
இவர்களை நம்மால் தவிர்க்க முடியாது.
இது போன்ற கதாபாத்திரங்களோடுதான் நமது வாழ்க்கைப்பயணத்தை தொடர வேண்டி இருக்கிறது.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.  

14 comments:

  1. கதாபாத்திரம் மட்டுமல்ல, "பூ" பார்வதி அசத்தல் நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச்சொன்னீர்கள் நண்பரே.

      ‘பூ’ பார்வதியை தமிழ் சினிமா ஏன் அதிகம் பயன்படுத்தவில்லை?

      Delete
  2. உங்கள் வலையின் பின்னூடங்களின் முலமாக நானும் டிராபிக்கை ஒரு வழியாக பார்த்துவிட்டேன். எனக்கும் பழ காட்சிகள் சென்னையில் ஒரு நாள் படத்தில் தான் பிடித்திருந்தது.

    ஆனால் டிராபிக்கில் ஒரு காட்சி மனதை தொட்டுவிட்டது. கதாநாயகனின் தந்தை மருத்துவர் என்று தெரியாமல் துணை மருத்துவர் மருத்துவ மொழியில் உண்மை நிலையை சொல்லுவர். அப்போது தந்தை படும் துன்பத்தை நெஞ்சை தொடும்படி காட்சி அமைத்திருப்பார்கள்.

    இதை ஏன் தமிழ் படத்தில் காட்சியக்கவில்லை என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் குறிப்பிடும் காட்சி தமிழிலும் இருக்கிறது.

      தமிழில், தந்தையாக நடித்த ஜெயப்பிரகாஷ்...
      இக்காட்சியில் ‘அண்டர் ஆக்டிங்கில்’ அசத்தியிருப்பார்.

      Delete
    2. மண்ணிக்கவும், நான் வாழும் நாட்டில் தமிழ்ப்படங்கள் அரங்குகளில் வெளியாவது இல்லை. அதனால் படத்தை வலையில்தான் பார்த்தேன்.நான் பார்த்த பிரதியில் இந்த காட்சி இடம் பெரவில்லை. தங்களுடைய பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி. நல்ல பிரதி வந்ததும் படத்தை இன்னொருமுறை பார்க்கவேண்டும்.

      Delete
  3. Well said..

    "தமிழ் படத்தில் துக்கடாக்கட்சியை கூட, காட்ட முடியாத நெருக்கடி இருக்கிறது."

    ReplyDelete
    Replies
    1. மற்ற மொழிகளை விட,தமிழில் சினிமா எடுப்பது மிகக்கடினமானது.

      Delete
  4. அருமையான படம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே.

      ‘அருமையான படம்’ என தங்களது படைப்பை நாடே கொண்டாட
      வாய்ப்பளிக்கும்படி...‘நாளைய இயக்குனரிடம்’வேண்டுகிறேன்.
      வாழ்த்துகிறேன்.

      Delete
  5. நன்றி நண்பரே.

    தங்கள் வலைப்பகுதி மிகவும் பயனுள்ளது.
    புகழும்... பாராட்டும் பெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  6. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி....

    ReplyDelete
  7. மலையாள டிராபிக் பார்த்திருக்கிறேன்.
    ஆகையால் தமிழில் பார்க்கவேண்டுமா என்ற என்ற எனது தயக்கத்தை உங்கள் பதிவு போக்கி விட்டது
    கடிபாக பார்கிறேன்.

    ReplyDelete
  8. எல்லோரும் தமிழ் பதிப்பை விட மலையாளப் படம் அருமை என்றார்கள் நீங்கள் அருமையான சில நிகழ்வுகளைப் பகிர்ந்து தமிழும் ஒரு வித அழகுதான்னு சொல்லிட்டீங்க... பார்ப்பதற்கு முயல்கிறேன்... ஏனெனில் திரைப்படம் பார்க்கவே நேரம் அமைவதில்லை...இப்படி விமர்சனம் படித்தே ஓட்டிக்கிறேன்....

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.