Apr 2, 2013

சென்னையில் ஒரு நாள் - ஹாட்ரிக் 2013


நண்பர்களே...
விஸ்வரூபம், பரதேசியை தொடர்ந்து  ‘சென்னையில் ஒரு நாள்’...
 2013ன் ஹாட்ரிக்காக  மலர்ந்துள்ளது.
வியாபார ரீதியாகவும் இப்படம் வெற்றி பெறும்.
பேனையே பெருமாளாக்கும் வல்லமை படைத்த சன் நிறுவனத்தார் கையில் பெருமாளே கிடைத்திருக்கிறார்.


காலத்தை முன் பின்னாகக்காட்டி காட்சிப்படுத்தும் திரைக்கதை பாணியில் பயணிக்கிறது இப்படம்.
கறை படிந்த கதாநாயகன் தனது ‘மாரல் ரிடம்ப்ஷனுக்காக’ மேற்கொள்ளும் லட்சியப்பயணம், அதற்கான தடைகள் என தெளிவான நேர் கோட்டில் அமைந்திருக்கிறது இத்திரைக்கதை.

மூலம் மலையாளம் என்ற சிறப்பிருந்தாலும் தமிழில் சிதைக்கப்படாமல் மெருகூட்டப்பட்டு வந்திருப்பதை பாராட்டியே ஆக வெண்டும்.

மூளைச்சாவு அடைந்த தன் மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கும் பெற்றோர்தான் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரங்கள்.
இந்தப்படம் நிச்சயம் குறிப்பிடத்தக்க அதிர்வுகளை நம்மிடையே ஏற்படுத்தும்.


தனது காதலனின் இறுதிப்பயணத்தை, அவனது லட்சியத்தை பூர்த்தி செய்யும் விதமாக வடிவமைக்கும் காதலியின் கதாபாத்திரம் மிக உயர்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

காதலனை இழந்த காதலியும், அவனது பெற்றோர்களும் இணையும் காட்சி
 ‘விஷுவல் கவிதையாக’ மலர்ந்திருக்கிறது.



இதயத்தை தானமாக வழங்கும் பெற்றோருக்கும்...
இதயத்தை தானமாக பெற இருக்கும்  பெற்றோருக்கும்...உள்ள முரணை
காவியப்படுத்தி உள்ளார் இயக்குனர் ஷாகித் காதர்.

இயக்குனரோடு அனைத்து தொழில் நுட்பக்கலைஞர்களும் கை கோர்த்து இத்திரைப்படத்தை மேம்படுத்தி தந்து உள்ளார்கள்.
அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளிப்போம்.

மாமேதை திரு.சுஜாதா அவர்கள் ‘உள்ளம் துறந்தவன்’ என்ற நாவலில்
இதயமாற்று சிகிச்சையை களமாக அமைத்திருப்பார்.
அந்நாவலில் அழகேசன் என்ற ஏழைக்கதாநாயகனின் இதயம்,
கோடீஸ்வர அம்பானி ஒருவருக்கு பொருத்தப்பட்டிருக்கும்.

மகனின் இதயத்தை தானமாக கொடுத்த தாய்,
அழகேசனின் காதலியிடம் கூறுவாள்...
 “ புள்ள, நீயும் வா.
காது கொடுத்து கேளு.
எப்படி படக்குபடக்குனு அடிக்குது பாரு.
அழகேசன் உயிரோடுதான் இருக்கான்”

 ‘அழகேசனின் தாயைப்போல் மனவலிமை படைத்த ஏழைகள் பலர் நம்மிடையே உள்ளார்கள்’ - சுஜாதா.

சுஜாதாவின் ‘உள்ளம் துறந்தவன்’ நாவலும்...
சென்னையில் ஒரு நாள் திரைப்படமும் மனித நேயத்தின் மகத்தான பண்புகளை நம்மிடையே விதைக்கின்றன.

இன்னும் நாக்கை தொங்கப்போட்டு வெள்ளைக்காரனை நக்கிக்கொண்டிருக்கும் சில இளைஞர்கள் மத்தியில்,
‘சென்னையில் ஒரு நாளில்’ வாழ்ந்து காட்டி இருக்கும் நம்பிக்கையூட்டும் இளைஞர்களை பற்றி அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

20 comments:

  1. ஒரு சிலர் விமர்சனத்தில் மலையாள டிராபிக் போல விறுவிறுப்பு இல்லாமல், தொய்வாக இருக்குனு சொல்லியிருக்காங்களே?? உங்கள் கருத்து?????

    ReplyDelete
    Replies
    1. நான் மலையாள ‘டிராபிக்’ படம் பார்க்கவில்லை.
      எனவே ஒப்பிட்டு கருத்து சொல்ல முடியவில்லை.

      மிகக்குறைவான இடங்களிலேயே படம் மெதுவாக பயணிக்கிறது.
      ஏனைய இடங்களில் படம் பறக்கிறது.

      Delete
  2. விமர்சனம் நன்றாக இருக்கிறது... டிராஃபிக் படத்தில் இன்னும் கொஞ்சம் உயிரோட்டம் இருக்கும் சீனிவாசனின் நடிப்பில்...

    ReplyDelete
    Replies
    1. நான் டிராபிக் பார்க்காமலேயே சொல்ல முடியும்.
      சீனிவாசன் அளவிற்கு சேரன் நிச்சயமாக செய்ய முடியாது.
      சீனிவாசன் அதி அற்புதமான கலைஞர்.
      அவர் செய்த ரோலை தமிழில் யாராலும் திருப்திகரமாக செய்ய முடியாது.

      Delete
  3. சார்.. மலையாளப் படத்தில் இருந்த விறுவிறுப்பு மட்டுமல்ல, பல விஷயங்கள் ( மிக முக்கியமான) தவற விடப் பட்டிருக்கிறது.. குறிப்பாக, விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் நாயகனும், நாயகியும், நாயகியின் வீட்டில் சந்தித்துக் கொள்ளும் காட்சி படமாக்கப் பட்டிருக்கும், இது அவர்களின் காதலின் ஆழத்தையும், படத்திற்கு வலு சேர்க்கும் காட்சி.. மற்றொன்று இறுதிக் காட்சியில் பிரசன்னா கதாப்பாத்திரத்தின் மனைவியின் கண்களில் நீர் கோர்த்திருக்கும்.. இது அவர் தான் செய்த தவறை உணர்ந்ததாக காட்டும்.. தமிழில் இது சரியாக சொல்லப் படாததால், தவறான புரிதலால் பிரசன்னா தவறு செய்துவிட்டது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நாயகனும் நாயகியின் காதல் காட்சி காட்டப்படாமல் ‘ஹாப் வேயில்’ அக்காதலை காட்டியதற்காக இயக்குனரை வியந்து பாராட்டிக்கொண்டு இருக்கிறேன்.

      ‘பிரசன்னா மனைவியின் கண்களில் நீர் கோர்த்தது’...
      படத்தை பழைய பஞ்சாக்கமாக்கும் உத்தி.
      தமிழில் மிகச்சரியாக இக்காட்சியை கையாண்டுள்ளார் இயக்குனர்.

      Delete
  4. மேலும் இறக்கும் இளைஞனின் கதாப்பாத்திரத்தில் ஸ்ரீனிவாசனின் மகன் வினீத் நடித்திருப்பார்.. இவர் மக்களுக்கு மிகவும் தெரிந்த முகமாதலால் அவர் இறக்கும் காட்சி நமக்கு படம் முடியும் வரை ஒரு பாரத்தை நம் மனதில் ஏற்றியிருக்கும். இதனால் அவர் பெற்றோர் வருந்தும் காட்சியும், மகனின் காதலி பெற்றோரை சந்திக்கும் காட்சியும் இன்னும் வலுவாக இருக்கும்.. மெசேஜ் சொல்வதற்காக வீணடிக்கப்பட்ட சூர்யாவை இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தால் படத்திற்கு வலு சேர்த்திருக்கும் என்பது என் கருத்து

    ReplyDelete
    Replies
    1. சூர்யாவை மூளைச்சாவில் செதத மாதிரி படமாக்கி இருந்தால் படம் பப்படமாகி இருக்கும் நண்பரே.

      நண்பரே,
      நீங்கள் ‘டிராபிக்கில்’ மாட்டி தவிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

      Delete
  5. இந்த படத்தில் சரத்குமாரின் கேரக்டர் மிக பொருத்தமாக இருக்கிறது என நினைத்தவர்களில் நானும் ஒருவன்.. ஆனால் படத்தில் ஒரு காட்சியில் response ஏ இல்ல என்பார்.. அந்த காட்சியில் ஒரு expression ஏ இல்லாம நடிச்சிருப்பார்.. அதே போல் மற்றொரு காட்சியில் தி மிஷன் இஸ் ஆன் என்பார்.. ஒரு உணர்ச்சியுடன் சொல்ல வேண்டிய அந்த காட்சியிலும் சொதப்பி இருப்பார்..

    ReplyDelete
    Replies
    1. சரத் இக்கதாபாத்திரத்தை மிகச்சரியாக செய்திருப்பதாக எனக்குப்பட்டது.

      Delete
  6. இவை மட்டுமல்லாது தமிழ் வெர்ஷனில் உள்ள மிகப் பெரிய ஓட்டை.. வானிலை சரியில்லாத காரணத்தால் தான் ஹெலிகாப்டரில் செல்ல முடியாது என கூறுவார்கள்.. அந்த குளோபல் மருத்துவனையின் முன் பெய்யும் மழையை தவிர வேறெங்கும் மழை பெய்வதாகவோ, வானிலை மோசமாகவோ இல்லை.. மாறாக எல்லா இடத்திலும் வெய்யில் கொளுத்தும் .. மலையாளத்தில் இது மிக கவனமாக படமாக்கப்பட்டிருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      புறப்படுகிற இடத்தில் மோசமான வானிலை இருந்ததால் ஹெலிகாப்டர் பயன்படுத்த முடியவில்லை என்று லாஜிக் பண்ணி உள்ளார்கள்.

      கேரளாவில் மழைக்கு பஞ்சமில்லை.
      சென்னையில் செய்ற்கை மழைதான் உருவாக்க வேண்டும்.
      அதற்கான பட்ஜெட் எகிறி விடும்.
      அதனால் போகிற வழியெல்லாம் ‘டிராபிக்கில்’ பெய்த மழை... ‘சென்னையில் ஒரு நாளில்’ பெய்யாமல் போயிருக்கலாம்.

      Delete
  7. மிகவும் அருமையான விமர்சனம் ... மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக நடித்த ரகுமான் ரசிகர்கள் தான் கிளைமாக்ஸ் காட்சியில் உதவி செய்து இருப்பார்கள் ... தமிழில் தேவை இல்லாமல் ஒரு நடிகனை உள்ளே நுழைத்து அவரை கொஞ்சம் ஓவராக பேசவைத்து இருகிரகள் ... இது தேவை இல்லாத பில்ட் அப்ப . ரியாலிட்டி மிஸ் ஆகிறது.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      தமிழில் நடிகர் சூர்யா, மனிதநேய அடிப்படையில் உதவுவதாக... மிகச்சரியாக பயன்படுத்தி உள்ளார்கள்.
      நடிகர் பிரகஷ்ராஜ் தனது ரசிகர்களை பயன்படுத்துவதாக காட்சிப்படுத்தி இருந்தால் தனது மகளின் உயிரைக்காப்பாற்ற எண்ணற்ற ரசிகர்களை பயன்படுத்துவதாக அக்காட்சி நீர்த்து போயிருக்கும்.

      Delete
    2. அன்பான வேண்டுகோள் ... டிராபிக் படத்தை ஒருமுறை பார்க்கவும்

      Delete
    3. நிச்சயம் பார்த்து விடுகிறேன் நண்பரே.

      Delete
  8. அருமையாக இருக்கிறது உங்கள் விமர்சனம்--அதுவும் சுஜாதாவின் வரிகள் மனதைத் துளைக்கிறது...

    ReplyDelete
  9. //இன்னும் நாக்கை தொங்கப்போட்டு வெள்ளைக்காரனை நக்கிக்கொண்டிருக்கும் சில இளைஞர்கள் மத்தியில்,// நச். அநியாயத்துக்கு உண்மை பேசுறீங்க. படம் பாக்குறேன். இங்க ரிலீஸ் ஆகலை. நன்னி.

    ReplyDelete
    Replies
    1. ‘இச்’ கொடுப்பது போல்...
      ‘நச்’ கொடுப்பதும் நல்லது நண்பரே.

      Delete

Note: Only a member of this blog may post a comment.