Apr 25, 2012

கடன் கேட்ட பாலுமகேந்திராவும்...கொடுக்காத கமலும்....


பாலுமகேந்திராவை காதலிக்க தொடங்கியது முள்ளும் மலரும் படத்தில்தான்.
நடிகர்கள் பெயர் திரையில் தோன்றியதும் கை தட்டி மகிழும் ரசிகர்கள் மத்தியில் டெக்னீசியன்களுக்கு கை தட்டி வரவேற்ப்போம்...
 நானும் எனது நண்பர்களும்...
அந்தப்பழக்கத்தின் பிள்ளையார் சுழி... முள்ளும் மலரும்...
கை தட்டல் வாங்கியது பாலுமகேந்திராவும்,மகேந்திரனும்.
 பாலுமகேந்திராவுக்கு ஏரிபிளக்ஸ் கேமிரா சற்று வாஞ்சையுடன் செயல்பட்டதோ என்ற சந்தேகம் இன்றும் தீரவில்லை.

பாலு மகேந்திராவின் முதல் படம் கோகிலாவில் கமல்தான் ஹீரோ...
அன்று தொடங்கிய வளர்பிறை பந்தம்....
மூன்றாம் பிறையில் இந்திய அரசின் சிறந்த நடிகர் பட்டத்தை சொந்தமாக்கியது கமலுக்கு....

பாலுமகேந்திரா பிழைக்கத்தெரியாத பிறவிக்கலைஞன்.
வெள்ளிவிழா படங்களை தந்தாலும்...வெள்ளிப்பணத்தை அள்ளுவதை பிரதானமாக்கியதில்லை.
லட்சங்களை மதிக்காமல் லட்சியத்துடன் படமெடுத்த போராளி.
இவரது காமிராவால் கவனிக்கப்படாத ஊட்டி லொகேசன்கள்.... சற்று நாணி தலை குனிந்து இருப்பதை பார்க்கலாம்.
அவர் படமெடுத்து தள்ளிய பைன் மரக்காடுகள் கர்வத்தோடு அலைவதை கண்டு களிக்கலாம்.

பல காரணங்களால் பணத்தட்டுப்பாடு வந்தது பாலுமகேந்திராவுக்கு....
கேட்கப்போன இடங்களில் எல்லாக்கதவுகளும் சாத்திக்கொண்டன...
மிகுந்த தயக்கத்துடன் கமலுக்கு போன் செய்து...
தனது நிலையை விளக்கி இரண்டு லட்சம் கடனாக கேட்டார்.
கமல் ஆபிசுக்கு வருமாறு அழைத்தார்.

தனது கம்பீரத்தை அடகு வைத்து... கடன் வாங்க...
காமிராக்கலைஞன்.... கமல் அலுவலகத்துக்கு வந்தார்.
கமல் எப்போதும் போல் அவரை வரவேற்று பேசினார்.
உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை அனைத்து விஷயங்களையும் பேசியவர் கடன் மேட்டரை...மறந்து கூட பேசவில்லை.
சரி...கமலிடம் பைசா...பெயராது ...எனத்தீர்மானித்து...
 போறேன்...கமல்... என புறப்பட்டார்.

ஸாரி..இருங்க....நான் உங்களை வரச்சொன்ன காரணத்தை சொல்லவேயில்லையே....
எனது கம்பெனி ராஜலக்‌ஷ்மி புரடக்‌ஷனில் ஒரு படம் தயாரிக்கப்போகிறேன்.
நீங்கள்தான் இயக்கிதர வேண்டும்.
இந்தாங்க... அதற்க்குறிய சம்பளம்...என இருபது லட்சம் எழுதப்பட்ட செக்கை கொடுத்தார்.

அந்தப்படம்தான் சதி லீலாவதி.
தனக்கு ஜோடியாக கோவை சரளாவை போடச்சொல்லி நிர்ப்பந்தித்ததும் கமலே...
ஒரு நகைச்சுவை நடிகையை ஜோடியாக்கும் ஆண்மை....
 கமல் ஒருவருக்கு மட்டுமே இன்று வரை சாத்தியமாகி உள்ளது.
ஆனால் இன்று வரை பாலுமகேந்திரா கேட்ட கடனை கமல் கொடுக்கவேயில்லை. 

28 comments:

  1. கமல்... கலைஞர்களின் கலைஞர். அதனால் தான் அவரை 'கலை ஞானி' என்று அழைக்கிறோம். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கமலின் பிறருக்கு உதவுவதில் கூட தனிப்பாணியை கடைப்பிடிப்பார்.

      Delete
  2. தலைப்பை படித்ததுமே ஓடி வந்தேன்..படித்தேன்..வியந்தேன்..பிறகு ஒரு விதமாக ரசித்தேன்..
    கமலா இப்படி என்று நினைத்துக்கொண்டே வாசிக்க தொடங்கியதற்கு முதுகில் குத்தாத குறையாக கீழே இருந்தது பதில்.ஒரு சிறந்த கலைஞனுக்கு கடன் என்ற பேரில் பணம் தந்து அவமானப்படுத்தாமல், படம் தந்து கலைக்கு பெருமைச் சேர்த்தது கமல் ஹாசன் அவர்களே.இந்த தகவல் எல்லாம் தெரியாமல் போயிருந்தால் சரியான இழப்பு நேர்ந்திருக்கும் எனது வாழ்வில்.அது நிகழாது காத்த அண்ணனுக்கு எனது நன்றி..தொடர்ந்து தொடருங்கள்..மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தம்பி குமரா...
      இந்த பதிவுக்கு கீரீடம் போல் உள்ளது உன் பின்னூட்டம்.
      நன்றி.

      Delete
  3. தலைப்பை பார்த்துட்டு வேற மாதிரி எண்ணிக் கொண்டேன். நல்ல விஷயம் தான்.

    ReplyDelete
    Replies
    1. இப்பதிவை சுவையாக்கவும்...திரில்லாக்கவும் இந்த தலைப்புதான் உதவியது.

      Delete
  4. பாலு மகேந்திரா நல்ல கலைஞர்தான். ஆனால் காப்பி அடிப்பதில் கமலுக்குக் குறைந்தவர் இலையே அவர். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. சம்பர் ஆப் 42வை அழியாத கோலமாக்கித்தான் தனது இயக்க பயணத்தை துவக்கினார்.
      தொடர்ந்து அனைத்து படங்களுமே காப்பிதான்.
      ஆனால் வீடு படம் அச்சு அசல் அவரது படைப்பு.
      தொடர்ந்து சந்தியாராகம்.இந்த இரண்டு படங்களுமே அவரது கறையை துடைத்து விட்டது.

      தொலைக்காட்சி தொடர்களில் அவரது கதை நேரத்தை யாரும் தொடக்கூட முடியவில்லை.

      Delete
    2. இந்த தகவல் புதுசா இருக்கே, பாலுமகேந்திரா சார் க்கூடவா காப்பி அடிச்சிருக்காரு..நம்ப முடியவில்லை..இன்னும் ரெண்டு மூன்று உதாரணம் இருப்பின் சொல்லுங்களே..தெரிஞ்சிக்கிறேன்.

      Delete
  5. தலைப்பைக் கண்டதும் ஆர்வத்துடன் வந்தேன்.. நீங்கள்தான் கமல் ரசிகராயிற்றே!! பதிவு படித்த பின்பு ஏதோவொரு திருப்தி மனதில் நிற்கிறது...
    வாழ்க ரஜினி - கமல் தொடர்!!

    //ஒரு நகைச்சுவை நடிகையை ஜோடியாக்கும் ஆண்மை....
    கமல் ஒருவருக்கு மட்டுமே இன்று வரை சாத்தியமாகி உள்ளது.//
    கோவை சரளா போல இன்னொரு நகைச்சுவை நடிகையை உருவாக்க தமிழ்சினிமா வாய்ப்பு தராத இந்தக் காலத்தில்.. கமலின் சாதனை நெடுங்காலம் நிலைத்தேயிருக்கும்!!
    சந்தோஷமாகவும்.. வருத்தமாகவும் இருக்கிறது :(

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...இரண்டு படைப்பாளிகளை பற்றிய பதிவு என்பதால்...பின்னூட்டங்களிலும் பின்னுகிறீர்கள் அனைவரும்.
      நன்றி.

      Delete
  6. கலைஞர்களுக்கான சம்பளத்தை சரியாக தருவதில் ராஜ்கமல் பிலிம்ஸ்..பிரபலம். உணவு சரியாகவும், ஏற்ற தாழ்வும் அற்றும் இருக்க வேண்டும் என கமல் விரும்புவார் என்று பலர் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  7. கமலுக்கு புகழாரம் சூட்டிய உங்கள் பின்னூட்டம்...
    நான் அறியாமல் செய்த பிழையை சுட்டிக்காட்டி விட்டது.
    அவரது தயாரிப்பு நிறுவனத்தை ராஜலக்‌ஷ்மி புரடக்‌ஷன் என தவறாக குறிப்பிட்டு உள்ளேன்.
    திருத்தி விடுகிறேன்.நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. உங்களைப்போலவே பலரும் பாலு மகேந்திராவை ஒரு மிக சிறந்த படைப்பாளி என்று தவறாக எண்ணி கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர். அவ்வளவே. மற்றபடி அவர் கொடுத்த முக்கால்வாசி படங்கள் ஆங்கிலம் மற்றும் பிற ஐரோப்பிய மொழி படங்களின் அச்சு எடுத்த காப்பி. நீங்களே இதை ஒத்துக்கொண்டாலும் வீடு (அது ஒரு முகம் தெரியாதவரின் சிறுகதை சாவியில் வந்தது என்று நினைக்கிறேன்.படம் வந்த போது என் கதையை திருடி விட்டார் என்று அந்த எழுத்தாளர் புலம்பினார்) சந்தியாராகம் என்ற இரண்டு படங்களை தவிர மற்ற எல்லாமே சொந்த சரக்கு இல்லை என்னும் போது பாலுவை ஒரு சிறந்த படைப்பாளி என்று ஒத்துக்கொள்வதில் சிரமம் இருக்கிறது. கே பாலச்சந்தரும் இதே போல காப்பி அடித்து படம் எடுப்பவர்தான். விஷயம் தெரிந்த நீங்களே இப்படி பாலுவுக்கு கூஜா தூக்குவது வியப்பாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே!
      எனக்கு உலக சினிமாவை ரசிக்க கற்றுக்கொடுத்தவர்கள் பாலச்சந்தரும்...பாலுமகேந்திராவும்தான்...

      அவர்களை சத்யஜித்ரே...ரித்விக் கடக்...என்று நான் கொண்டாடவில்லை.
      இவர்கள் இல்லாமல்... நல்ல சினிமாவை எப்படி அடையாளம் காணமுடியும்?

      1961ல் பிறந்த எனக்கு திரைப்பட விழாக்களையும்,அதில் பங்கேற்ற படங்களை பற்றியும் பத்திரிக்கைகளில் மட்டும் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
      பாலச்சந்தர் படங்களும்,பாலுமகேந்திரா படமும்தான்
      எனக்கு கிடைத்த உலகசினிமாக்கள்.

      இன்று டிவிடி&இணையம்..
      அனைவருக்கும் உலகசினிமாவை சாத்தியமாக்கியிருக்கிறது.

      வீடு மாதிரி படமெடுக்க...எந்த தயாரிப்பாளராவது பணப்பெட்டியோடு காத்திருக்கிறாரா?
      இப்படி ஒரு படம் உருவாக்க...
      நாலு படத்த திருடி... நாலு படம் எடுக்கலாம்...
      தப்பில்ல...

      அவர் நினைத்திருந்தால் கே.வி.ஆனந்த் மாதிரி... மசாலா பாதையில் பயணித்து கோடிகளை குவித்திருக்கலாம்.

      இப்போதும் சொல்லுகிறேன்...
      பாலுமகேந்திரா பிழைக்கத்தெரியாத படைப்பாளி.

      Delete
    2. @காரிகன் - நீங்கள் பாலு மகேந்த்ராவை காப்பி அடிப்பாவ்ர் என்று கூறியதில் உண்மை இருக்கலாம். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால்,அவர் படங்கள் உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தன என்பதை உங்களால் மறுக்க முடியுமா? வெறுமனே காப்பி அடிக்கும் ஒருவரால், அத்தகைய அனுபவத்தை கொடுக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்கள் இரண்டு மூன்று படங்கள் தவிர மற்றவை எல்லாம் காப்பி என்கிறீர்கள்! மற்றபடங்கள் எதிலிருந்து காப்பி அடிக்கப்பட்டவை என்று சொன்னால் நான் இன்னும் பல தெளிவான கருத்துக்களை எடுத்துரைக்க வசதியாய் இருக்கும்!!!!

      Delete
  9. நண்பரே...அரிய தகவல் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சொன்ன நண்பருக்கு... நன்றி.

      Delete
  10. கமல் கமல்தான்...கோவை சரளாவுடன் இன்னொரு படம் எடுத்தால் நல்லாயிருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. தனது கதைக்கு தேவைப்பட்டால்...
      மீண்டும் கோவை சரளாவுடன் ஜோடி சேர்வார்...
      அதான் கமல்.

      Delete
  11. திரு உலக ரசிகரே உங்கள் ஆதங்கம் புரிவதால் இதை சொல்கிறேன். தமிழ் சினிமாவில் உலக தரத்தின் நிழல் படிய ஆரம்பித்தது எஸ் பாலச்சந்தர் என்கிற மக்கள் மறந்துவிட்ட ஒரு மகத்தான visionary இடமிருந்து துவங்குகிறது.அவரின் அந்தநாள் என்ற படமே தமிழ் சினிமாவின் முதல் உலகத்தரம் வாய்ந்த படம். பின் வெகு காலத்திற்கு பின்னர் ருத்ரையா என்பவர் எடுத்த அவள் அப்படித்தான் என்ற படம் பிரெஞ்சு நியு வேவ் பாணியில் வந்த ஒரு அபாரமான திரைப்படம். ஒரு பெண் மூன்று முறை தவறான ஆண்களை நம்பி ஏமாறும் கதை. நவீன சிந்தனை உள்ள மணிரத்தினம் கூட தளபதியில் பானுப்ரியா இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டாலும் தன இரண்டாம் கணவனோடு படுக்கையை பகிர்ந்துகொள்ள மாட்டார். இப்படி மூளைசலவை செய்யப்பட்ட தமிழ் சமூகத்தில் அவள் அப்படித்தான் ஒரு ஆச்சர்யமான நிகழ்வு. அதன் பின் பாரதிராஜா வின் பதினாறு வயதினிலே சிறந்த படைப்பு. மகேந்திரனின் அநேகமாக எல்லா படங்களுமே வெகு சிறப்பானவைதான்.(அழகிய கண்ணே கை கொடுக்கும் கை தவிர) நீங்கள் சொல்லும் கே பாலச்சந்தர் பாலு மகேந்திரா இவர்களின் அருகேவா? சத்தியமாக இல்லை நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே!ஒரு வாதத்துக்காக இதை சொல்கிறேன்...
      வீணை எஸ்.பாலச்சந்தர் ரோஷமானைத்தான் அந்தநாள் ஆக்கினார்.
      அவரது பொம்மை,நடு இரவில் அனைத்துமே ஆங்கிலப்படங்கள் மற்றும் ஆங்கில நாவல்களில் சுட்டதுதான்.

      ஒன்று சொல்கிறேன்...நண்பரே!
      எல்லா படைப்புகளுமே தழுவல்தான்.
      ஒரிஜினல் எது என்று கண்டுபிடிக்கப்படாமல் செய்வதுதான் கிரியேட்டிவிட்டி.

      பாரதிராஜாவும்...மகேந்திரனும் கூடத்தான் மேலை நாட்டுப்படங்களை காப்பி அடித்து உள்ளனர்.
      அதற்க்காக அவர்களை படைப்பாளி இல்லை என ஒதுக்கி விட முடியுமா?

      பாலுமகேந்திரா,பாலச்சந்தர்,பாரதிராஜா,மகேந்திரன்,
      ஏன்...மணிரத்னம் கூட படைப்பாளிதான்.
      இவர்கள் அனைவருமே தமிழ் சினிமாவை தலை நிமிர வைத்த பிரம்மாக்கள்.

      Delete
    2. நண்பரே!
      தமிழின் முதல் நியோ ரியலிச திரைப்படம்...
      பாதை தெரியுது பார்.
      இயக்கியவர்...
      இந்தியாவின் முதல் நியோ ரியலிஸ்டிக் திரைப்படமான 'சின்னமோளை' இயக்கிய நிமாய்கோஷ்.
      இவரை பற்றியும்,படத்தை பற்றியும் தனியே பதிவு போட உள்ளேன்.

      Delete
  12. மிக அருமையான பதிவு நண்பரே! அடஹிவிட நீங்கள் கொடுத்திருந்த தலைப்பு மிக அருமையாக இருந்தது!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி நண்பரே!

      Delete
  13. இதான்.. நாலு வரினாலும் நச்சுனு இருக்கனும்.. தலைப்ப பாத்து ஏமாந்து கமலை சந்தேக பட்டவர்களில் அடியேனும் சேர்ந்து விட்டேன்..இங்கே ஒன்னு சொல்லிகறேன்.. கமல் கொடுக்கும் பேட்டிகளின் ரசிகன் நான்.. நக்கலும், வார்த்தை ஜாலமும் விளையாடும்.. அவர் காப்பி அடித்த விசயங்களை கருந்தேள் மூலம் தெரிந்து கொண்டாலும் ஏனோ வெறுக்க முடியவில்லை..சம்மந்தமே இல்லாம இதெல்லாம் நான் சொல்ல காரணம், உங்களிடம் இருந்து கமலை பற்றி நிறைய எதிர்பார்கிறேன்..

    ReplyDelete
  14. கார்த்தி...கமலை பற்றி நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்.

    ReplyDelete
  15. ///"பாரதிராஜாவும்...மகேந்திரனும் கூடத்தான் மேலை நாட்டுப்படங்களை காப்பி அடித்து உள்ளனர்"///

    நீங்கள் மகேந்திரன் காப்பி அடித்த படங்களில் சிலவற்றை அல்லது ஒன்றாவது சொல்லியே ஆகவேண்டும். அவர் காப்பியடித்தாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் நிச்சயம் அப்படி நடந்திருக்காது என்றே நம்புகின்றேன். ஒரு நாவலை திரைப்படமாக எடுப்பது நிச்சயம் காப்பியடிப்பதாகாது. காப்பி என்பது ஒரு திரைப்படத்தை திரைப்படமாகவே எடுப்பதுதான், நாவல்களை திரைப்படமாக எடுப்பது அல்ல. எழுத்து என்பது வேறு தளம், அதனை திரையில் கொண்டுவருவது என்பது வேறு தளம். நாவலை படமாக எடுப்பது காப்பியடித்தல் என்பது சரியல்ல.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.