Apr 22, 2011

படிக்கலாம் வாங்க-எதிர்ப்பும் எழுத்தும்

நான் பார்த்த உலகசினிமாக்களை உங்களிடம் அறிமுகம் செய்ய ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது.பொழுதுபோக்காக ஆரம்பித்த விசயம்...இன்று விடமுடியாத ‘பழக்கமாகி’ விட்டது. “இந்த கெட்ட பழக்கத்தை விட்டு ஒழிங்க”என இல்லத்தரசி அலறுகிறாள்.காது கேக்காதது போல் தப்பித்து வருகிறேன்.
சினிமா பார்ப்பது போல் எனக்கு மிகவும் பிடிப்பது புத்தகங்கள்.நான் படித்ததில் பிடித்த பகுதியை உங்களிடம் பகிர ஆசை. “.நான் இதெல்லாம் படிக்கிற ஆளு”என உங்களிடம் பீத்திக்கொள்வதுதான் முதன்மையான நோக்கம்.முதல் நூலாக உங்களிடம் பகிர்வது

எதிர்ப்பும் எழுத்தும் துணைத்தளபதி மார்க்கோஸ்

[விடியல் வெளியீடு]

மெக்சிகோவில் சியாபாஸ் என்ற பகுதியில் மக்களுக்கான போராட்டத்தில் எழுந்த எழுத்துக்கள் இவை.இதன் வீர்யம் குறையாமல் நமக்கு மொழி பெயர்த்து வழங்கியவர் எஸ்.பாலச்சந்திரன்.புத்தகம் வடிவில் பைபிளுக்கு அண்ணன்.குமுதம்,விகடன் மட்டும் படித்தவர்களுக்கு இந்த தமிழ் சிரமம்தான்.உயிர்மை,காலச்சுவடு,தமிழினி பத்து இதழ்களாவது படித்துவிட்டு வாருங்கள்.அப்போதுதான் கொஞ்சமாவது புரியும்.புதிய கலாச்சாரம் படிப்பவர்களுக்கு இந்நூல் லட்டு.பதிவுலகில் ‘வினவு’ வலைப்பக்கத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்கு திருநெல்வேலி அல்வா போல் உள்ளே இறங்கும். மக்களுக்கு எழுச்சியூட்டும் பல குட்டிக்கதைகள் இதில் உள்ளன.அதில் எனக்கு பிடித்தது....
சுண்டெலியும் பூனைக்குட்டியும்
முன்பொரு காலத்தில் ஒரு சுண்டெலி இருந்தது.அது மிகவும் பசியோடிருந்தது.ஒரு சிறிய வீட்டின் சிறிய சமையலறையில் இருந்த,பாலாடைக்கட்டியின் ஒரு சிறிய துண்டை சாப்பிட விரும்பியது.உறுதியான இந்த முடிவோடு இந்த சுண்டெலி,பாலாடைக்கட்டியின் சிறிய துண்டை எடுப்பதற்க்காகச் சிறிய சமையலறைக்குச் சென்றது.ஆனால், அதன் வழியில் ஒரு பூனைக்குட்டி குறுக்கிட்டது. மிகவும் பயந்து போன சுண்டெலி,ஓடிவிட்டது.அதனால் சிறிய சமையலறையிலிருந்து சிறிய பாலாடைக்கட்டி எடுக்கமுடியவில்லை. அப்போது, சிறிய சமையலறையிலிருந்து சிறிய பாலாடைக்கட்டியை எப்படி எடுப்பது என்று அது யோசித்தது.

"எனக்குத்தெரியும்.ஒரு சிறிய தட்டில் பாலை ஊற்றி வைத்து விடுவேன். பூனைக்குட்டி பாலைக் குடிக்கப்போகிறது. ஏனென்றால்,பூனைக்குட்டிகள் பாலை மிகவும் விரும்புகின்றன. அப்போது பூனைக்குட்டி பாலைக்குடித்து கொண்டிருக்கும்போது, அது கவனிக்காதபோது,நான் சிறிய சமையலறைக்குள் சென்று, சிறிய பாலாடைக்கட்டியை எடுத்துச் சாப்பிடப்போகிறேன். இது மிகவும் அருமையான யோசனை”என்று சுண்டெலி தனக்குத்தானே சொல்லிக்கொண்டது.

அதன்பிறகு, அது பாலை தேடிச்சென்றது.ஆனால்,பால் சிறிய சமையலறையில் இருந்தது.சிறிய சமையலறைக்குள் சுண்டெலி செல்ல விரும்பியபோது, பூனைக்குட்டி அதன் வழியில் குறுக்கிட்டது.மிகவும் பயந்துபோன சுண்டெலி ஒடிப்போய்விட்டது.அதனால் பாலை எடுக்க முடியவில்லை.அப்போது, சிறிய சமையலறையிலிருந்து பாலை எப்படி எடுப்பது என்று அது யோசித்தது.

“எனக்குத்தெரியும்.நான் ஒரு சிறிய மீனைத் தூரத்தில் வீசியெறியப்போகிறேன்.அந்தச்சிறிய மீனைச் சாப்பிடுவதற்க்காகப் பூனைக்குட்டி ஓடிவிடப்போகிறது. அப்போது, பூனைக்குட்டி சிறிய மீனைச் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது,அது கவனிக்காதபோது,நான் சிறிய சமையலறைக்குச்சென்று,சிறிய பாலாடைக்கட்டியை எடுத்து சாப்பிடப்போகிறேன்.இது மிகவும் அருமையான யோசனை”என்று சுண்டெலி தனக்குத்தானே சொல்லிக்கொண்டது.

அதன்பிறகு, அது சிறிய மீனைத்தேடிச் சென்றது.ஆனால் சிறிய மீன் சிறிய சமையலறையில் இருந்தது.சிறிய சமையலறைக்குள் செல்வதற்க்குச் சுண்டெலி விரும்பியபோது பூனைக்குட்டி அதன் வழியில் குறுக்கிட்டது.மிகவும் பயந்துபோன சுண்டெலி ஒடிப்போய்விட்டது.அதனால் சிறிய மீனை எடுக்க முடியவில்லை.

அந்தச் சுண்டெலி தனக்கு தேவையான சிறிய பாலாடைக்கட்டி, பால், சிறிய மீன் ஆகிய அனைத்தும் சிறிய சமையலறையில்தான் இருக்கின்றன என்பதையும்,பூனை தன்னை விடாது என்பதால் தன்னால் சமையலறைக்குள் செல்லமுடியாது என்பதையும் அப்போதுதான் உணர்ந்தது.

“போதும்! போதும்!”என்று சொல்லிவிட்டு,இயந்திரத்துப்பாக்கியை எடுத்து பூனைக்குட்டியைச் சுட்டுக்கொன்றுவிட்டுச் சிறிய சமையலறைக்குள் சென்று பார்த்தது.சிறிய மீன், பால், சிறிய பாலாடைக்கட்டி ஆகிய அனைத்தும் கெட்டுப்போயிருந்ததையும்,அவற்றை சாப்பிட முடியாது என்பதையும் கண்டது.எனவே பூனைக்குட்டி கிடந்த இடத்துக்கு திரும்ப வந்தது.அந்த பூனைக்குட்டியை துண்டுதுண்டாக வெட்டியது. அதை வறுவல் செய்தது. பிறகு, தனது நண்பர்கள் அனைவரையும் விருந்துக்கு அழைத்தது.அவர்கள் அனைவரும்குட்டிப்பூனை வறுவலைச்சாப்பிட்டார்கள். பாடினார்கள்.ஆடினார்கள்.மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். முன்பொரு காலத்திலே....

கதையின் முடிவும் இக்கடிதத்தின் முடிவும் இதுதான்.நாடுகளுக்கிடையே உள்ள பிரிவுகள் “கள்ளக்கடத்தல்” என்னும் குற்றத்தை சித்தரிக்கவும், போருக்கு நியாயம் கற்பிக்கவும் மட்டுமே பயன்படும் என்று உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நாடுகளுக்கிடையேயான எல்லைகளைக் காட்டிலும் மிகப்பெரியது என்று குறைந்தபட்சம் இரண்டையாவது குறிப்பிடமுடியும்:நவீனத்துவம் என்னும் மாறுவேடம் தரித்த குற்றம் இவற்றில் ஒன்று: இது வறுமையை உலகம் முழுவதும் விநியோகம் செய்கிறது. இரண்டாவது குற்றம் வெட்க உணர்வு. வெட்கத்தை உணர்வது என்பது, நடனமாடும்போது ஒருவருக்கு ஏற்படும் தடுமாற்றத்தின் போது உண்டாவதுதானே தவிர, நாம் கண்ணாடியைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஏற்படுவதல்ல. முதலாவது விசயத்திற்க்கு [வறுமைக்கு] முடிவு கட்டுவதற்க்கும், இரண்டாவது விசயத்தை [வெட்க உணர்வை] செழிக்கச்செய்வதற்க்கும், சிறந்ததொரு வாழ்க்கைக்காக நாம் போராடுவது ஒன்றுதான் வழி. மற்ற அனைத்தும் இயல்பாக நடைபெறும். நூலகங்களையும் அருங்காட்சியகங்களையும் நிறைக்கக்கூடியவையாக அவை இருக்கும்.

உலகத்தை வென்றால் மட்டும் போதாது, அதைப் புதிதாக மாற்றியமைக்க வேண்டியது அவசியம்.

படுக்கை என்பது காதலுக்கான ஒரு நொண்டிசாக்கு மட்டும்தான் என்பதையும், மெட்டு என்பது நடனத்திற்க்கான ஒரு ஒப்பனை மட்டும்தான் என்பதையும், தேசியம் என்பது போராட்டத்திற்கான ஒரு தற்செயலான பின்னணி மட்டும்தான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
தென்கிழக்கு மெக்ஸிக மலைகளிலிருந்து,
லகாண்டன் காடுகளின் டான் டுரிட்டோ.
இது போன்ற குட்டிக்கதைகள் பொதிந்து வந்த கடிதங்கள் இந்நூலில் ஏராளம்...ஏராளம்.
இந்தக்கடிதம் உங்களுக்கு ஏற்படுத்திய அனுபவத்தை எனக்கு பின்னூட்டம் மூலம் தெரிவிக்கவும். நன்றி.

9 comments:

  1. உலகத்தை வென்றால் மட்டும் போதாது, அதைப் புதிதாக மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்ற வரிகள் என் கண்ணோட்டத்தில், ஓட்டுபோட்டால் மட்டும் போதாது
    ஆட்சியமைத்தால் மட்டும் போதாது மக்கள் நல அரசாய் அது இருக்கவேண்டும் என்பதும் அதற்க்கான கருவிகளாய்த்தான் அரசு செயல்படவேண்டும்.அவ்வாறு இல்லையெனில் சியாபாஸ்போல் இங்கும் நடக்க வேண்டும்.

    ReplyDelete
  2. மிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே!முந்தைய அரசின் தவறுகளில்,மாறி வந்த அரசு பாடம் கற்க வேண்டும்.
    இல்லையென்றால் சுண்டெலி துப்பாக்கியை தூக்க வேண்டியது நேரிடும்.

    ReplyDelete
  3. அவசியம் வாங்கிப் படிக்கிறேன்..

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி செந்தில்.சீக்கிரம் வாங்கிப்படியுங்கள்.புத்தகம் விலைக்கு வாங்க விடியல் பதிப்பகம் நண்பர் சிவாவை தொடர்பு கொள்ளுங்கள்.[0422-2576772].விலை ரூ350/ மட்டுமே.மொத்தமே அவரிடம் பத்து புத்தகம்தான் உள்ளது.2005ல் வெளியிட்டது.மறு பதிப்பில் அடக்கவிலையே நிச்சயம் ரூ.700/ஐ தாண்டும் எனக்குறிப்பிட்டார்.

    ReplyDelete
  5. நன்றி நண்பரே. நிச்சயமாக நூலை வாங்கிப் படிப்பேன்.

    ReplyDelete
  6. நண்பர் சரவணக்குமார் அவர்களே!வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. சூப்பர்ண்ணா.... :-) அவசியம் படிக்கிறேன்

    ReplyDelete
  8. Unable to post the comment in tamil. Luks as a gud book to me. Will try to get it and will read. Continue to post reviews about gud books here.. Best wishes !!!!

    ReplyDelete
  9. நன்றி முரளி&ராஜேஷ் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.