Dec 5, 2014

எல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்!.




கோவா சர்வதேச திரைப்பட விழாவில்,
அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி...
கால்வாசி காலியாகி...
இருந்த முக்கால்வாசி பேரும் முழி பிதுங்கி பார்த்த படத்தை நானும் பார்த்தேன்.
கியூவில் நிற்கும் போது...முன்னால் நின்ற 84 வயது பெரியவரிடம் பேச்சு கொடுத்தேன்.
எங்கே இருந்து வர்றீங்க?
“பிரான்ஸ்”
உங்க பேரு ?
“ கோடார்டு”
படத்தோட இயக்குனர் பேரை கேக்கல...உங்க பேரை கேட்டேன்.
“ நாந்தான் கோடார்ட்”
நீங்க கோடார்டுன்னா...நாந்தான் கமல்ஹாசன்.
நம்பிட்டேன்.
என்ன யோசிக்கிறீங்க?
நீங்க கமல்ஹாசன் என்பதை கமல்ஹாசனும் நம்பிட்டா என்ன நடக்கும்னு யோசிச்சு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டேன்.
தெய்வமே! நீங்கதான் கோடார்டு. ஒத்துக்குறேன்.
அரசாங்க மரியாதையோட ‘ரெட்கார்பெட்ல’ நடந்து வராம ஏன் க்யூவில வர்றீங்க?
‘உலகசினிமா ரசிகன்னு’ புருவத்தை உயர்த்தி...
நெஞ்ச நிமித்தி... உலா வருகிறாயே!
இந்த படத்தை எப்படி உள் வாங்கப்போறேன்னு பாக்க வந்தேன்.
ஏன் இந்த சோதனை?
பக்தர்களை சோதிப்பது ‘பரமனுக்கு’ வழக்கம்தானே!
படம் தொடங்கியது.
பர்ஸ்ட் பிரேம்லேயே ‘கோடாட்ர்ட் அட்டகாசம்’ தொடங்கியது.
தியேட்டர்ல இருந்த பாம்பு,பல்லி, பூரான், தேளு எல்லாம் தெறிச்சு வெளிய ஓடிருச்சு!.
நீ ஓடலியா!
ஐய்யா...நான் ‘உலகசினிமா ரசிகன்’.
உங்க படத்துக்கு ஓட மாட்டேன்.
ஆனா, சரித்திரப்படம்னு...தரித்திரப்படம் காமிச்சா அலறிகிட்டு ஓடிறுவேன்.
படம் ஆரம்பிச்ச உடனே,
‘ப்ரண்ட் சவுண்ட் ஸ்பீக்கர்’ அவுட் ஆகி...
சைடு ஸ்பீக்கர்ல கன்னாபின்னான்னு சவுண்டு பிச்சிகிட்டு வந்திச்சு.
பார்வையாளர்கள் அனைவரும் ‘ஆப்பரேட்டரோட அம்மாவை’ திட்ட ஆரம்பித்தார்கள்.
கிக்...கிக்..கிக்.
உங்க குசும்புதானே இது...அநாவசியமா ஆபரேட்டரை திட்டு வாங்க வச்சீட்டீங்க!.
15 நிமிடம் கழித்து...
ஒரு ஷாட்ல, இருக்குற விஷூவல்சுக்கும்...சவுண்டுக்கும் சம்பந்தம் இல்லை.
அந்த சவுண்டுக்கு உரிய விஷூவலை வேறொரு சந்தர்ப்பத்தில காமிக்கிறீங்க!
ஏன் இந்த புதிர் விளையாட்டு?
ஏன்னா...நீங்கள் மேதைகள்.
விடையை கண்டு பிடிப்பீர்கள் எனத்தெரியும்.
ஏன்னா...நானும் மேதை.
சினிமா வரலாற்றில், இது வரை கண்டிராத 3டி அற்புதம் ஒரு காட்சியில் நிகழ்ந்தது.
இதற்காகத்தான் இப்படத்தை 3டியில் எடுத்தீர்களா?
ஹாலிவுட் பசங்க அவ்வளவு பேரையும் ‘காயடிச்சிட்டீங்களே !
ஹா...ஹா...
இந்த ஷாட் மட்டும் அல்ல...
இந்த 3டி கேமராவை நான் எனக்குன்னு ஸ்பெஷலா உருவாக்குனேன்.
ஷாட் பை ஷாட்...ஏன் இப்படி தொடர்பே இல்லாம படம் எடுத்து பாமரர்களை கொல்றீங்க!
சிட்பீல்ட் எழுதிய திரை இலக்கணப்படி ஒரு படம் கூட எடுக்க மாட்டேங்கறீங்க!.
சிட்பீல்டு சின்னப்பையன்...அவன் ரூலுக்கேல்லாம் நான் படம் எடுக்க முடியுமா?
இந்த படத்தில ஒரு ரூலை உருவாக்குவேன்.
அடுத்தப்படத்துல நானே அதை உடைப்பேன்.
அப்படியே பழகிட்டேன்.
திரைக்கதை இலக்கணம் புக்கை எல்லாம் என்ன பண்றது?
உங்க ஊர்லதான் ‘போகி’ வரும்ல!.
அதுக்கு யூஸ் பண்ணுங்க.
ஒண்ணு சொல்றேன்...
எல்லா இலக்கணத்தையும் உடைங்க...
அப்போதான் கோடம்பாக்கத்துல கூட ஜெயிக்க முடியும்.
படம் முடிந்தது.
இந்த படத்தை மறுபடியும் சென்னை திரைப்பட விழாவில் பார்க்கப்போகிறேன்.
ஏன் ?.
அது.... வந்து......புரியல.
கொஞ்சம் புரியலயா? கொஞ்சம் கூட புரியலயா ?
வாங்களேன்...காப்பி சாப்டுகிட்டே ‘மிஷ்கின்’ பத்தி பேசுவோம்.
கோடார்ட் மயக்கமாகி சரிந்து விட்டார்,
“ அது ”.
Goodbye To Language [ Adieu Au Language ] | 3D Film | 2014 | France | 70 min | Directed by : Jean-Luc Godard.