Dec 12, 2014

‘புலி’ காத்த ‘கிளி’ !


தரத்தில்,‘மெட்ராஸ்’ திரைப்படத்தை விட பல மடங்கு குறைவான ஒரு திரைப்படத்தை, கோவாவில் முழுவதுமாக உட்கார்ந்து பார்த்தேன்.
வழக்கமாக அப்படி உட்கார்ந்து பார்க்க மாட்டேன்.
திரைப்பட விழாக்களில் எனக்கு கற்றுக்கொடுக்கும் ‘திரைப்படங்களை’ மட்டுமே பார்ப்பேன்.
நான் கற்றுக்கொடுக்கும் நிலையிலிருக்கும் படங்களை பார்க்கவே மாட்டேன்.
அப்படி இருந்தும் இந்தப்படத்தை நான் பார்த்ததற்கு காரணம், இத்திரைப்படம் பிறந்த நாடு ‘எத்தியோப்பியா’.
இந்த பெயர் போதும்.
மீதியை நீங்கள் எழுதிக்கொள்வீர்கள்.
சுமாரான ‘சினிமா மொழியின்’ வழியாக எத்தியோப்பிய கிராமத்து வாழ்க்கையையும், நகரத்து வாழ்க்கையையும் என்னால் தரிசிக்க முடிந்தது.
இத்திரைப்படம் உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் பின்னப்பட்டது.
எத்தியோப்பியாவில் தடை செய்யப்பட்ட படம்.
இத்திரைப்படத்தின் மாந்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.
அதில் ஒருவர் ‘ஆப்ரிக்க நோபல்’ பரிசு பெற்றவரும் கூட.
அரசையும், எதேச்சதிகார மனிதர்களையும் எதிர்த்து போராடும் அந்த வீரப்பெண்மணிதான் இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம்.
இப்படிப்பல சிறப்பம்சங்களை கொண்டு இருந்தது இத்திரைப்படம்.
பெண்கள் பள்ளியில் படிப்பதே குற்றம் எனக்கருதப்படும் வாழ்வியலைக்கொண்ட கிராமம்.
மீறிப்படிக்கிறாள் 12 வயது சிறுமி.
பள்ளியிலிருந்து திரும்பும் அவளை,
‘ஷோலே’ படக்கொள்ளைக்காரர்கள் போல குதிரையில் வந்து தூக்கி செல்கிறது ஒரு கூட்டம்.
கூட்டத்தின் தலைவன் அவளை கற்பழிக்கிறான்.
காரணம், ஒரு பெண்ணை கற்பழித்தால்...
கற்பழித்தவனுக்கே கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள்.
இது அந்த கிராமத்து சட்டம்.
அடுத்த நாள், நைசாக அந்தப்பெண் தப்பிச்செல்வாள்.
போகும் போது ஒரு துப்பாக்கியையும் கவர்ந்து செல்கிறாள்.
தப்பிச்செல்வதை பார்த்ததும்...துரத்துகிறார்கள்.
ஒரு கட்டத்தில், இனி ஓட முடியாது என தீர்மானித்து,
துப்பாக்கியால் குறி பார்த்து, ‘குறியை’ சுடுகிறாள்.
கற்பழித்த ‘காலி’ காலி.
போலிஸ் லாக்கப்பில் சிறை வைக்கப்படுகிறாள்.
செய்தி அறிந்து, நகரத்து பெண் வக்கில் அவளை சிறை மீட்க வருகிறார்.
சிறையிலிருந்து மீட்கவே ‘கடும் போராட்டம்’.
தொடர் போராட்டங்கள் தேவைப்படுகிறது.
அந்தப்பெண் வக்கீல்தான் ‘ஆப்ரிக்க நோபல்’பரிசு பெற்ற பெண்மணி.
படத்தில் ஒரு காட்சி என்ன பதற வைத்தது.
சிறையிலிருந்து சிறுமியை மீட்டு,
தன் வீட்டில் பாதுகாப்பாக வைத்து இருப்பார் வக்கீல்.
அவர் வெளியில் போயிருக்கும் போது,
டெலிபோன் மணி அடிக்கும்.
அவ்வளவுதான்...அந்தச்சிறுமி பயந்து நடுங்குவாள்.
காரணம்...அவள் வாழ்க்கையில் முதன் முறையாக டெலிபோனை பார்த்தது போலிஸ் ஸ்டேஷனில்தான்.
பிளாஷ்பேக்...
போலிஸ் ஸ்டேஷனில் டெலிபோன் மணி அடிக்கிறது.
காவல் துறை அதிகாரி பேசுகிறான்.
பேசி போனை வைத்து விட்டு அவளை மிருகத்தனமாக தாக்குகிறான்.
தொடர்ந்து டெலிபோன் மணி அடித்துக்கொண்டு இருக்க..
சிறுமி மான் போல் மருண்டு வீட்டை விட்டே ஓடுகிறாள்.
அவளைப்பொருத்த வரை டெலிபோன் மணி...சாவு மணி.
இப்படிப்பல அபூர்வக்காட்சிகளை இத்திரைப்படத்தில் தரிசித்தேன்.
இப்படத்தை ‘காவியத்தலைவனை’ கொண்டாடுபவர்கள் கட்டாயம் பார்த்து விடுங்கள்.
இந்த திரைப்படத்திலிருக்கும் குறைந்த பட்ச ‘சினிமா மொழி’ கூட...
காவியத்தலைவனில் கொஞ்சம் கூட பயன்படுத்தாமல் இருப்பதை கண்டுணர்வீர்கள்.
Difret | 2014 | Ethiopia | 99 min | Directed by : Zeresenay Derhane Mehari.
ஆப்பிரிக்க பெண் புலியின் பேட்டி இதோ...

எத்திப்பியோவில் இத்திரைப்படம் தடை செய்யப்பட்ட செய்தி இதோ...