May 15, 2013

‘காமத்துப்பாலில் மாஸ்டர்’ இளையராஜா - பாகம் 7


‘தனது கலையின் மூலம் ஒரு மனப்பரப்பையும் [ mind scape ]
அந்தப்பிரதேசங்களின் வாசனையையும் ஏற்படுத்துகிறவனே 
சிறந்த கலைஞனாக இருக்கிறான்’ - மக்ஸிம் கார்க்கி.

பாடல்களின் மூலம் இளையராஜா நிர்மாணிக்கும் நிலவெளி, அழகானது.
இயல்பாகவே இவரது பாடல்களைக்கேட்க நேர்கையில்,
அவை தனக்கென ஒரு மனப்பரப்பை நமக்குள் ஏற்படுத்துகின்றன.

‘மாதா உன் கோயிலில்...மணி தீபம் ஏற்றினேன்’ என்கிற பாடலின் உள்ளார்ந்த பக்தி உணர்வும் - தன்னிரக்கமும்,
‘கடவுள் உள்ளமே...கருணை இல்லமே’ என்ற பாடலில் கைவிடப்பட்ட குழந்தைகளின் தனிமை உணர்வையும்,
‘மாலையில் யாரோ...’ என்ற ‘சத்ரியன்’ படப்பாடலில்,
காதலின் ஏகாந்த வெளியின் தீராத தொலைவையும்,
‘ஓ...பட்டர்ஃப்ளை...’ என்ற  ‘மீரா’ படப்பாடலில்,
வண்ணத்துபூச்சிகளின் சிறகின் இசையையும்,
அவை திசையற்று அலையும் மனப்போக்கையும்,
‘ செந்தாழம் பூவில்...வந்தாடும் தென்றல்’ என்ற  ‘முள்ளும் மலரும்’ படப்பாடலின் ப்ரிலூடாக [ prelude ] வரும் ஹம்மிங்,
மலைப்பாதைகளின் ஈரத்தையும், பயண அனுபவத்தையும்,
‘சின்னத்தாயவள்’ என்ற ‘தளபதி’ படப்பாடலின் ப்ரிலூடில்,
தந்தி இசைக்கருவிகள் மீட்டும்... பிரிவின் வலியையும்,
விடை பெறும் மனநிலையையும்,
‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாரதி படப்பாடலில்,
ஆற்றாமையையும்...காலத்திற்கு எதிராக மறுபதிவற்று கலைந்து போகிற வேண்டுதலின் அபத்தத்தையும் நாம் உணரலாம்.
இவை மிகச்சில உதாரணங்கள்.

இவ்வாறாக பாடல்களின் மூலமாக, அவை நிகழும் மனப்பரப்பை நமக்குள் விஸ்தரிப்பது,
திரை இசைக்கலைஞர்களில் இவருக்கிருக்கிற அபூர்வமான படைப்பு குணாதிசயம்.
[ இந்த மாதிரியான இசை தரும் நிலப்பரப்பை பொருட்படுத்தாமல்,
பொருந்தாத சூழலில்,
பொருந்தாத உடல் அசைவுகளுடன் படம் பிடிக்கப்படுவது,
இவரது பெரும்பாலான பாடல்களுக்கு நேர்கிற சோகம்.]

இவரது தாலாட்டுப்பாடல்கள், அதில் குழந்தைத்தன்மையை இசையில் உருவகிக்க,
தொட்டிலின் மேல் அசையும் சிறு மணி போல,
இவர் பயன்படுத்தும்  'லய வகைகள்' [ rhythm patterns ] ஆய்வுக்குறியவை.
‘தென் பாண்டிச்சீமையிலே’ என்கிற  ‘நாயகன்’ படப்பாடலின்  ‘ப்ரிலூட்’
இதற்கு ஒரு பதமாகக்கொள்ளலாம்.

நாயகி, காம வயப்படுகிற சூழல்கள்,
நம் திரைப்படங்களில் அடிக்கடி நிகழ்கிறது.
இது மாதிரியான தருணங்களிலும் இவரது இசை தரும் உணர்வு நேர்மையானது.
‘என்னுள்ளில் எங்கோ’ என்ற  ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படப்பாடலில்,
 'முதல் பின்னணி இசையில்' [ First BGM ] குழலிசை கீழ்ஸ்தாயிக்கும் - மேல்ஸ்தாயிக்கும்
இடையில் தள்ளாடுகிற விதம்,
தயக்கம், மனப்போராட்டம் அதைத்தொடர்ந்து
உடல் சிலிர்த்து நடுங்குகிற விதமாக வருகிற...
தபேலாவின் லயம் அற்புதமானது.
இந்தப்பாடலின் ஹம்மிங்,
கீழ்ஸ்தாயி ஸட்ஜமத்திலிருந்து,
மேல்ஸ்தாயி ஸட்ஜமத்திற்கு தாவுதல் மூலம்          
மன உணர்வின் கேவலை, தவிப்பை, காமப்புலத்தின் கிறங்குதலை
தெளிவாக உருவகிக்கிறது.
‘என்னுள்ளே...என்னுள்ளே...’ என்ற  ‘வள்ளி’ படப்பாடலில்,
பாடலின் வரிகளை நீக்கி விட்டு வெறும் ட்யூனாக வாசித்துப்பார்த்தால் கூட,
இதன் உட்பொதிந்த, 'வயப்படும் உணர்வை' [ obsessive ] நாம் பெற முடியும்.
இது போன்ற உதாரணங்கள் அளவில்லாதவை.
‘ஜானி’ படத்தின் ‘ஆசையை காத்துல...தூது விட்டு...பாடலின் இசையில்,
பின்னணி இசையாக வரும் குழலிசை இன்னொரு உதாரணமாக குறிப்பிடலாம்.


எழுதியவர் : செழியன்
நூல் : பேசும்படம் [ கடைசி இருக்கையிலிருந்து சில குறிப்புகள் ]
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

நண்பர்களே...
இசையின் ஏற்பாடுகளில், கேள்வி-பதில் என்ற உத்தியை,
இளையாராஜா கையாள்வதை... செழியன் எளிய தமிழில் விளக்குவதை,
அடுத்தப்பதிவில் பார்ப்போம்.

கீழ்க்கண்ட இணைப்புகளில் இளையராஜாவின் கீதங்களை கேட்கலாம்.

மாதா உன் கோயிலிலே...

கடவுள் உள்ளமே...

மாலையில் யாரோ...

4  என்னுள்ளே எங்கோ... ஏங்கும் கீதத்தை கேட்க... 

மாலையில் யாரோ என்ற பாடலை காணொளியில் காண்க...

8 comments:

  1. சூப்பர் பதிவு சார்.நல்ல தகவல்

    ReplyDelete
  2. நல்ல பதிவு, பகிர்வு

    அடுத்த அங்கத்துக்காக காத்திருக்கின்றேன்

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்றான ‘என்னுள்ளில் எங்கோ’ பல தடவை செழியன் விளக்க எடுத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.
    இந்த பாடலை சிறுவயதில் கேட்ட பின் சுமார் 18வருடங்களுக்கு பின் சில மாதங்களுக்கு முன் தான் கேட்டேன். முதல் தடவையில் என்னை அடித்து போட்டுவிட்டது. இந்த பாடலின் முக்கிய சிறப்பியல்பு அந்த பாடல் காட்சிக்கான சூழ்நிலை உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தியது தான். தனியே ஆடியோவில் கேட்பதை விட காட்சியுடன் பார்க்கும் போதுதான் அந்த பாடலின் வீர்யம் புரியும்.

    முக்கிய விடயம் இந்த பாடலை மட்டும் பார்த்துவிட்டு இந்த பாடல் ஒளிப்பதிவாளர் யார் என்று தேடினேன். அவர் பெயர் பிரசாத் ,ஒரு காலத்தில் பிரபலமான ஒளிப்பதிவாளர் பின்பு கௌரவ நடிகராக தன் பயணத்தை தொடர்ந்தார்.
    இருட்டுக்குள் காட்சி எடுப்பது போன்ற அபத்தங்கள் இல்லாமல் இந்த பாடல் காட்சியின் சூழ்நிலை உணர்வுகளை வெளிக்காட்டு விதமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

    ReplyDelete
    Replies
    1. எனது கல்லூரி நாட்களில் வெளியான படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி.
      அந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே அப்போது ஹிட்.
      அந்த காலக்கட்டத்தில்,நண்பர்களிடம் சொன்ன கமெண்ட்தான் இப்பதிவின் தலைப்பு.

      வருகைக்கும்,ஒளிப்பதிவாளர் பற்றிய தகவலுக்கும் நன்றி நண்பரே.

      Delete
  4. ராஜா ராஜா தான்

    ReplyDelete
    Replies
    1. ராஜா நம் காலத்தவர் என்பது நமக்கு பெருமை.

      Delete
  5. மாலையில் யாரோ என் சின்ன வயது கவிதையை நம்நாட்டு வானொலி இலங்கை வானொலி அந்திநேரச்சிந்துவில் சேர்த்து என்னையும் சந்தோஸப்படுத்திய கவிதைப்பாடல்/!பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. ராஜா அவர்கள் இசை புலமை அடுத்த தளத்திற்கு சென்று விட்டதால், அவரது தற்போதைய படைப்புகள் சிலருக்கு புரியாமல் போகிறது. ஆனால் அவரது புதிய படைப்புகள் உலகத் தரம் பெற்றவை என்பது வெளி நாட்டு இசை வல்லுனர்கள்களால் அதிசயமாக பார்க்கப் படுகிறது.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.