நண்பர்களே...
நடிகை அஞ்சலி குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள்...
அதன் கருத்துருவ பிம்பங்கள்...
கற்கால மிராண்டிகளாக நம்மை உருமாற்றம் செய்யும் பணியை செவ்வன செய்து வருகின்றன.
கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் மூலமாக...
‘நவீன சாவித்திரியாக’ நம்மை மகிழ்வித்தவள் அவள்.
அஞ்சலி எல்லாப்பிரச்சனைகளிலிருந்து கடந்து போக...
எல்லா வல்ல கடவுளை பிரார்த்திப்போம்.
அஞ்சலி குறித்த கிசுகிசுக்களை புறக்கணிப்போம்.
இப்படிக்கு,
உலகசினிமா ரசிகன்.
இயக்குனர் வசந்தபாலன், அஞ்சலிக்காக ‘முகநூலில்’ வடித்த
கண்ணீர்ப்பூக்களை உங்கள் பார்வைக்கு காணிக்கையாக்குகிறேன்.
கற்றது தமிழ் படம் பார்த்த போது
நெசமாத்தான் சொல்றீயா என்று அஞ்சலி
பல இடங்களில் கேட்கும் போது
எனக்கு மிக மானசீகமான பெண் கேட்பது
போன்ற சித்திரத்தை ஏற்படுத்தியது.
பறவையே எங்கு இருக்கிறாய் என்ற பாடலில்
அவள் சுடிதாரின் நிறம்
வாழ்க்கைக்கு மிக நெருக்கமானதுமான பொருளாக உணர முடிந்தது. சுடிதாரை வேண்டாமுன்னு சொல்லும் போது
மனஎழுச்சியூட்டும் சித்திரங்களை எழுப்பியடியிருந்தாள்.
உனக்காக தான் இந்த உயிர் உள்ளது என்ற பாடல்
எல்லையற்ற மனதின்
சந்தோச பெருவெள்ளத்தில்
காதலை தேடும் ஒருவனின் மன வெளியை பிரதிபலிப்பதாக இருந்தது.
அதில் அஞ்சலி உருவாக்கிய சித்திரங்கள்
ஒரு இலக்கிய நினைவூட்டலாக இருந்தது.
ரத்தமும் சதையுமான
பல்வேறு பெண்களின் சித்திரங்களை
அஞ்சலி தனக்குள் கொண்டிருந்தாள்.
ஒரு வானம் பல்வேறு வண்ணங்களை எழுப்பி எழுப்பி காட்டுவது போல பல்வேறு மத்திய ரக பெண்களில் ஒன்றாக எனக்கு தோன்றினாள்.
இப்படியாக அந்த படம்
என் மனசுக்குள் ஆயிரம் எண்ணங்களை உசுப்பி விட்டது/
மஹாராஸ்ராவில் எங்கோ மாமாவின் வீட்டில் அவள் தங்கியிருப்பாள்
ஜீவா போய் பார்க்க போவார்
அதன் பிறகு ஒரு விபசாரவிடுதியில் அஞ்சலியை பார்ப்பான்.
இப்படியாக அவளின் துயரம்
இருளுக்கும் இருண்மைக்கும் புதிருக்கும் நடுவே
ஒரு முறுக்கப்பட்ட கயிறாக சுற்றியபடியேயிருக்கும்.
இப்படியாக இந்த படம் பல்வேறு மின்மினிகளை
மனதிற்குள் பறக்கவிட்டபடி நிறங்களை உதறியபடியே இருந்தது.
ஒரு புதிய பெண் இத்தனை அழுத்தமாக அழகாக
பல்வேறு விதமான கால கட்டங்களை
மனதில் கொண்டு வந்து நடித்துவிட்டாளே என்று தோன்றியது.
நம்பிக்கையான புதிய வரவு என்று தோன்றியது
அங்காடித்தெரு படத்திற்காக
சேர்மக்கனி கதாபாத்திரத்தில் நடிக்க
பல புதிய பெண்களை பார்த்துக்கொண்டிருந்தேன்,
கதைநாயகன் மகேஷ் என்று முடிவானவுடன்
இது காதல் படம்
இவனும் புதுசு
கதாநாயகியும் புதுசுன்னா
இரண்டு பேரும் தயக்கத்திலேயே கூச்சத்திலே
காதல் காட்சிகளில் விலகி விலகி நடித்து
காதலை கொண்டு வராமல் சொதப்பி விடுவார்கள்
என்று எண்ணினேன்.
உடனே என் மனசுக்குள் வந்த ஒரு உருவம் அஞ்சலி.
அவளை பார்க்க வேண்டும் என்று அழைத்தேன்,
அவள் அம்மா(இப்போது சித்தி)வுடன்
ஜிலுஜிலு சுடிதாருடன் வந்தாள்.
உடனே குழப்பமாக இருந்தது.
வேறு சுடிதார் வாங்கி வந்து டெஸ்ட் சூட் பண்ணினேன்,
கதை நாயகன் மகேஷ்
பெண் என்பதால் தயங்கினான்,
விலகி நின்றான்,
அவன் தயக்கத்தை புரிந்து கொண்டு
நான் பிரச்சினையை விளக்காமலே
அஞ்சலி அந்த நெருக்கத்தை வரவழைத்து நடித்தாள்.
மிக அற்புதமான ரசாயன மாற்றம் இருந்தது,
இருவரும் நல்ல ஜோடி என்று தோன்றியது.
உடனே அஞ்சலியை தேர்வு செய்தேன்.
படப்பிடிப்பு துவங்கியது.
மெல்ல மெல்ல சேர்மக்கனியாக மாறத்துவங்கினாள்
முதல் 3 நாட்களில் படத்தின் அதி முக்கியமான காட்சியை
படமாக்கும் போதே அற்புதமான நடிப்பை வழங்கத்துவங்கினாள்,
என் மனம் மலர்ந்தது
கதைக்கு உயிர் வந்தது,
மகேஷ் சுமாராக நடிக்கும்
பல இடங்களில் அஞ்சலி துரக்கி சாப்பிடத்துவங்கினாள்,
கவனம் அவள் பக்கம் திரும்பியது,
மகேஷ் நடிக்க தயங்கிய
நெருக்கமான காதல் காட்சிகளில்
அவனின் கூச்சத்தை இவள் போக்கினாள்.
இடைவிடாது அவனிடம் பேசிபேசி நெருக்கத்தை வரவழைத்துக்கொண்டாள் அங்காடித்தெரு திரைப்படத்தில்
காதல் இத்தனை அழுத்தமாக வந்தது அஞ்சலியால் தான்.
பாசாங்கற்ற பெண்.
புத்திசாலி.
ஒரு இயக்குனரின் கதாநாயகி.
காலம் அவள் நடிப்பைக்கண்டு கொண்டது.
அவளின் உலகம்
கனவின் மர்ம வெளிகளாலும் பைத்திய நிலையின் பல்வேறு புதிர்களாலும் நிலைகளாலும் கட்டப்பட்டவை.
கனவுக்கும் நனவுக்குமிடையே
யதார்த்தத்திற்கும் புனைவிற்கும் இடையே
எப்போதும் பெருகி கரைபுறண்டு ஓடிக்கொண்டிருக்கும்
ரகசிய நதியின் கரையில் அவள் வாழ்கிறாள்,
வாழ்வின் சூட்சுமமான முடிச்சினை அவிழ்த்தபடி
காலத்தின் சரித்திரத்தின் எல்லையற்ற விகாசத்தில்
அவள் அத்தனை துயரத்தோடு சஞ்சரித்தபடியே இருக்கிறாள்,
கடந்த காலத்தின் மெல்லிய ஏக்கம் கனவு துயரம் ரகசியம்
அவளின் முகத்தில் தெரியாதபடி புன்னகையால் மறைத்தபடியிருந்தாள்,
அவளை பற்றிய அத்தனை சித்திரங்களும்
மாய காற்றில் மிதந்தபடியிருக்கின்றன.
அவள் ஏக்கத்தின் வெக்கையும் கனவின் பெருவிம்முதலும்
எப்போதும் தன்னுடன் வைத்துக்கொண்டவளாக அவள் இருக்கிறாள்
விதியின் மாபெரும் கதை.
அவள் விநோதமானதும் கொடூரமானதுமான வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
அழகியல் வரம்புக்குள் சிக்காத
எத்தனையோ அழகிகளில் அவளும் ஒருத்தி,
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
பாடலில் வரும் சிறுசிறு ரியாக்சன்
அத்தனை அழகாக இருக்கும்.
இன்று அவள் மீது சுமத்தப்படும பிம்பங்கள்
கனவுகளற்ற உலர்ந்த விச மொழியில் உள்ளது,
விரிக்கப்படும் அத்தனை கனவுகளும்
மாய மொழியிலும் வியாபார நிமிர்த்தமான மீறல்கள் கொண்டதாக உள்ளது.
திரைக்குடும்பத்தில் இல்லாத ஒரு பெண்
திரைத்துறையில் நுழைய
எத்தனை ஒரு பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கிறது.
நிறைய மர்மமான பொய்களையும் புதிர்களையும்
அவிழ்க்க வேண்டியிருக்கிறது.
அதீத புனைவுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது
இந்த கதைகளை கேட்கும் போது
அந்த மனிதர்களை பார்க்கும் போது
வாழ்வின் மதிப்பீடுகளும் கனவுகளும் உடைந்து நொறுங்குகின்றன.
அவள் பிரச்சினைகள் அத்தனையும் தீர்ந்து
புதிதாக மீண்டு வர இறையை வேண்டுகிறேன்.
yes i also pray for this intelligent girl..
ReplyDeleteபிரார்த்தனைக்கு நன்றி சகோ.
Deleteஎன்னுடைய பிரார்த்தனைகளும்..
ReplyDeleteபிரார்த்தனைக்கு நன்றி நண்பரே.
Deleteநான் அஞ்சலி நடித்த அணைத்து படங்களையும் ஒன்று விடாமல் திரைஅரங்கு சென்று பார்த்து வருகிறேன்.சிறந்த நடிகை.அஞ்சலி நிச்சயம் மீண்டு வருவாள் என்று மனதார நம்புகிறேன்.
ReplyDeleteபெற்றோர் அற்ற பெண்ணாய் இருப்பதால் அவளுடைய உழைப்பை சுரண்டும் உறவினர்கள். இந்த அளவுக்கு நேர்த்தியாக நடிக்க முடிகிறது என்றால் சித்தியின் வளர்ப்பில் துண்பங்களை அனுபத்திருக்ககூடும் அதுதான் இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. அவரது சித்தி அவரது உழைப்பை உரிஞ்சும் ஒரு ஒட்டுண்ணி என்றே படுகிறது.
ReplyDeleteஅருமையான நடிகைதான்! பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரவேண்டும்! பிரார்த்திப்போம்!
ReplyDeleteஅஞ்சலி மீண்டு வரவேண்டும்.அதற்கும் மேலாக அவரின் அந்தரங்க பிரச்சனையை வியாபாரமாக்காமல் இருக்கவேண்டும்...
ReplyDeleteஅஞ்சலிக்கு ஆதரவுக்கரம் நீட்டிய நண்பர்கள் வினோத், புரட்சி தமிழன், சுரேஷ், முகமத் ஆகியோர் அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteபொதுவா திரைப்பட தளங்களை நான் விரும்புவதில்லை. ஆனால் கொடுக்கும் ஒவ்வொரு தகவல்களையும் படித்துக் கொண்டே வர எப்படி உங்களை தவற விட்டேன் என்று மனதிற்குள் ஆதங்கம் வருவதை தவிர்க்க முடியல.
ReplyDeleteநண்பரே...
Deleteஎனது தளத்திற்கு வந்து பாராட்டி பெருமை படுத்தியதற்கு நன்றி.