பிரான்ஸ்காரர்கள் எல்லா நல்ல படத்தையும் தாங்களே எடுப்பது என்று குத்தகை எடுத்து விட்டார்கள் போலிருக்கிறது!!!!!!.
அந்த வகையில் சமீபத்திய வரவு ஆர்டிஸ்ட்.
மவுனப்பட காலங்களில் சூப்பர் ஸ்டாராக இருந்த ஒருவரது வாழ்க்கையை 2011ல் கருப்பு வெள்ளையில்...அதுவும் மவுனப்படமாக எடுக்கும் துணிச்சல்...அடடா....
முதலில் தயாரிப்பாளர் Thomas Langmannக்கு என் முதல் மரியாதை.
இரண்டாவது இப்படத்தின் இயக்குனர் Michel Hazanavicius ...உள்ளிட்ட ஒட்டு மொத்த குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...பாராட்டுகள்.
சினிமாவில் மவுனப்படங்கள்தான் கலையின் உச்சம் என கொண்டாடுவார்கள் தீவிர சினிமா ஆர்வலர்கள்.
அதை நூற்றுக்கு நூறு சரி என உணர்ந்தேன்.
பாட்டில் ஷிப் பொட்டம்கின்,இண்டாலரன்ஸ் போன்ற மவுனப்படங்களை இது வரை பார்க்காதது மன்னிக்க முடியாத குற்றம்.
இதற்க்கு கருடபுராணத்தில் என்ன தண்டனை ?என்பது தெரியவில்லை.
பேசும் படங்களும்...வர்ணப்படங்களும் சினிமாவின் ஆன்மாவை சிதைத்து விட்டதாக தீவிர சினிமா ஆர்வலர்கள் குற்றம் சாட்டுவார்கள்.
இந்த குற்றச்சாட்டை உண்மை என ஒவ்வொரு ரசிகரும் ஆர்ட்டிஸ்ட் படம் பார்க்கும்போது உணர முடியும்.
இதுதாண்டா பின்னணி இசை என பின்னி எடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் Ludovic Bource.
பின்னணி இசை ...மோட்டிவேட்டிங் மியுசிக் என்ற தளத்தில் காட்சிக்கு காட்சி பரிணமித்து கொண்டே போகிறது.
உலகின் தலை சிற்ந்த பின்னணி இசையில் முதல் பத்து இடங்களில் தைரியமாக சேர்த்து விடலாம்.அப்பீலே வராது.
இப்படத்தின் நாயக,நாயகியரின் நடிப்புக்கு இணையாக....
நடிகர் திலகத்தையும்,நடிகையர் திலகத்தையும்தான் ஈடு இணையாக சொல்ல முடியும்.
21 இஞ்ச் டிவியில் பார்த்ததிலேயே இருவர் நடிப்பிலும் மயங்கி விட்டேன்... வெள்ளித்திரையில் பார்த்தால்.... அவ்வளவுதான்..... ரசிகர் மன்றமே தொடங்கி விடுவேன்.
இப்படம் பல் வேறு பிரிவுகளில்....
ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும்....வெற்றி கிடைக்காது.
ஏனென்றால் இப்படம் மோதுவது Tree Of Life படத்தோடு.
Tree Of Life படத்திற்க்கு பக்க பலமாக உலகின் மிகப்பெரிய மதம் இருக்கிறது.
மதத்தின் முன்னால் எப்பேர்பட்ட கலையும் தோற்றுப்போகும்.
இதில் ஒளிந்திருக்கும் அரசியலை ஆஸ்கார் விருது பட்டியல் வெளியான பிறகு நீங்களே உணர்வீர்கள்.
80%நகைச்சுவையும்,20% சோகமும்,0%ஆபாசமும் கலந்து செய்த கவிதையாக இப்படம் இருப்பதால் குடும்பத்தோடு காண வேண்டிய U U U திரைப்படம்.
ஒரு காலத்தில் சூப்பர்ஸ்டாராக இருந்து....
தனது ஆஸ்தி,அந்தஸ்து,புகழ் அனைத்தும் கரைந்து....
வெற்று மனிதனாக மரித்த தியாராஜ பாகவதர் வாழ்க்கையை...
கருப்பு வெள்ளையில்...மவுனப்படமாகவே எடுக்கப்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்! என்ற ஆசை பிறந்தது.
எனது ஆசை பேராசையா?
நிராசையா?